படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கேப்பாப்புலவு மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அம்மக்களுக்கு ஆதரவாக வடக்குமாகாண பாடசாலை மாணவர்களும் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இன்று காலை 7.30 மணியிலிருந்து 8.30 மணிவரை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேப்பாப்புலவில் விமானப்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 31ஆம் நாளிலிருந்து கேப்பாப்புலவு மக்கள் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் இணைந்து 54 பாடசாலை மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தமது காணிகளை விடுவிக்குமாறும் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்விரு போராட்டங்களுக்கும் ஆதரவு தெரிவித்தும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விரைவில் பாடசாலைக்குச் செல்லும் நிலை உருவாகவேண்டுமெனவும் கோரி வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
0 Kommentare:
Kommentar veröffentlichen