தமிழர்களுக்கான நீதி மறுப்பிற்கு சம்பந்தனின் அசமந்தப் போக்கே காரணம்

தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கி வரும் இன்னல்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் அசமந்தப் போக்கே முழுமையான காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக குற்றம்சுமத்தியுள்ளார்.
மக்களது பிரச்சனை குறித்து ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடம் பல தடவைகள் வலியுறுத்திய போதிலும், இது தொடர்பாக எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அங்கு நேரில் சென்று கருத்து வெளியிட்டபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்த தகவல்களை முன்வைத்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி, காணமால்போகச் செய்யப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று ஒன்பதாவது நாளாக தொடர்கின்றது.
யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும், சரணடைந்த நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறும், காணாமல் போகச் செய்யப்பட்டோர் குறித்து தீர்க்கமான முடிவொன்றை வழங்குமாறும், சர்வதேச விசாரணையே வேண்டும் எனவும் வலியுறுத்தி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இடம்பெறும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அங்கு நேரில் சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உட்பட தமிழ் மக்களின் பிரதான பிரச்சனைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.
ஜெனீவாவில் நேற்று ஆரம்பமாகியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில் மீண்டும் கால அவகாசம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு நிபந்தனையுடன் கூடிய கால நீடிப்பு வழக்கப்பட வேண்டும் என்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒட்டுமொத்த நிலைப்பாடு அல்ல என்று தெரிவிக்கும் சிவசக்தி ஆனந்தன், இது கூட்டமைப்பில் உள்ள அங்கத்தவர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சம்பந்தன் ஆகியோரது தன்னிச்சையான கருத்து என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Kommentare:

Kommentar veröffentlichen