யுத்தக் குற்றங்களுடன் தொடர்புடைய ஜகத் ஜயசூரியவிற்கு துாதுவர் பதவி

ஸ்ரீலங்கா இராணுவத்தினர் மிக மோசமான யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றைப் பெருமளவில் புரிந்தாகக் குற்றச்சாட்டப்படும் யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் வன்னிப் பிராந்தியத்திற்கான கூட்டுப் படைத்தளபதியாகக் கடமையாற்றிய முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய பிறேசிலுக்கான ஸ்ரீலங்காவின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வன்னியில் தமிழ் மக்கள் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட யுத்த குற்றங்கள் தொடர்பாக கட்டளைப் பொறுப்புள்ள அதிகாரிகள் தொடர்பான விசாரணைகளில் ஐ.நா ஈடுபட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்காவின் மைத்திரி-ரணில் அரசு, முன்னாள் படைத் தளபதி ஒருவரை உயர் இராஜதந்திரியாக நியமித்திருப்பது கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

சேவையிலிருந்து இளைப்பாறும் மூத்த படையதிகாரிகளையும், தளபதிகளையும் உயரிய வெளிநாட்டு இராஜதந்திரிகளாக நியமிக்கும் வழக்கத்தினை முன்னாள் மஹிந்த ராஜபக்ச அரசு கைக்கொண்டிருந்தது.

இதன் ஒரு அங்கமாகவே, ஐ.நா முதல் ஆஸ்திரேலியா வரையான முக்கிய வெளிநாட்டுத் தலைநகரங்களில் ஸ்ரீலங்காவின் வெளிநாட்டுக்கொள்கையினையும், இராஜதந்திர உறவுகளையும் முன்னெடுப்பதற்காக யுத்ததில் முக்கிய பங்காற்றிய முப்படைத் தளபதிகளும், படைத்துறை அதிகாரிகளும் முன்னைய ஆட்சியாளர்களினால் நியமிக்கப்பட்டு வந்தனர்.

ஆனால் இவை அரசியல் ரீதியான நியமனங்கள் என்றும், அவை அனைத்தும் நிறுத்தப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு தற்போது தென்னமெரிக்க நாடான பிரேசிலுக்கான தூதுவராக ஜெனரல் ஜகத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்கான சம்பிரதாய பூர்வமான அனுமதியை கடந்த வாரம் கொலம்பிய ஜனாதிபதி யுவான் மனுவல் சண்டோஸ் கல்டெரொனிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

2007 ஆம் ஆண்டு முதல் யுத்தம் முடியும் வரை இவர் வன்னிக்கான முப்படைகளின் தளபதியாகக் கடமைபுரிந்தார்.
குறிப்பாக வன்னியில் மே 2009 இல் முடைவடைந்த படைநடவடிக்கையின் போது சுமார் 70,000 தொடக்கம் ஒரு லட்சத்திற்கும் வரையான தமிழ் கொல்லப்பட்டதாகத் தற்போது ஐ.நா தெரிவித்துள்ள நிலையில், அந்தக் காலப்பகுதியில் படைநடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் அளப்பரிய இராணுவ சேவைகளைக் கௌரவிக்கும் வகையில் இவர் பிரேசிலுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இவர் வன்னிப்படைத் தளபதியாக இருந்த காலப்பகுதியிலேயே வவுனியா ஜோசப் முகாம் எனப்படும் வன்னிக்கூட்டுப்படைத் தலைமயகத்தில் மிக மோசமான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் சித்திரவதைகள் புரியப்பட்டதாக ஐ.நா மனித உரிமை பேரவையும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் தெரிவித்துள்ளதுடன், அதற்கான நேரடிச் சாட்சியங்களையும் வெளிக்கொணர்ந்துள்ளன.

இந்த அறிக்கைகள் குறித்து ஸ்ரீலங்கா அரசு இதுவரை எவ்வித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் இவரது பிரேசிலுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளமையானது ஸ்ரீலங்காவிற்கு யுத்தக் குற்ற விசாரணையூடாக நீதியையும், உண்மையான நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் எந்தளவுக்கு ஆர்மாக இருக்கிறது என்பதனைச் சுட்டிக்காட்டியிருப்பதாக சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கண்டித்திருக்கிறார்கள்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, லெப்ரினன் ஜெனரலாகப் பதவியுயர்த்தப்பட்டு இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

இதன் 2013 ஆம் ஆண்டு ஜெனரலாகத் தரமுயர்த்தப்பட்ட இவர் கூட்டுப்படைத் தளபதியாகக் கடமையாற்றியிருந்தார்.

0 Kommentare:

Kommentar veröffentlichen