கடுமையான நிபந்தனைகளுடனேயே கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் – சம்பந்தன்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கடும் நிபந்தனைகளுடனேயே கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் செனட் பிரதிநிதிகள் குழுவை நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடியபோது இவ்விடயத்தைத் தெரிவித்த சம்பந்தன், கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளில் சிலவற்றை மாத்திரமே இலங்கை நடைமுறைப்படுத்தியுள்ளதெனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் ஐ.நா. தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமெனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் இதுவரை நடைபெற்ற விடயங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருப்பதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டுமெனவும் பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை நிலைநாட்ட வேண்டுமெனவும் சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலும் இதன்போது கவனஞ்செலுத்தப்பட்டதோடு, குறிப்பாக சமூக பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

0 Kommentare:

Kommentar veröffentlichen