காணாமல் போனோருக்கான அலுவலகம் இராணுவத்தை நீதிமன்றில் நிறுத்துவதற்கல்ல

காணாமல் போனவர்கள் தொடர்பில் அலுவலகம் அமைக்கப்படுவது இராணுவத்தினரை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு அல்ல. இராணுவத்தினரை யுத்த நீதிமன்றங்களில் நிறுத்த வேண்டிய தேவையும் எமக்கு இல்லை. அவ்வாறு நிறுத்துமாறு எந்தவொரு சர்வதேச நாடும் கூறவுமில்லையென முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

அதேநேரம், தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக் கூடிய வகையிலான அரசியலமைப்பு மாற்றமொன்று இந்த வருடத்துக்குள் கொண்டுவரப்பட வேண்டும். அது புதிய அரசியலமைப்பாக இருக்கலாம் அல்லது அரசியலமைப்பு திருத்தமாகவும் இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

தேசிய சமாதானப் பேரவையின் ‘அனைத்து சமயத் தலைவர்களின் தேசிய மாநாடு’ நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. நாட்டின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த சர்வமதத் தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு மாவட்ட ரீதியில் நல்லிணக்கம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தனர். இம்மாநாட்டில் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். இதில் சிறப்புரையாற்றும்போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இதனைத் தெரிவித்தார்.

யுத்தத்தில் காணாமல் போன தமது உறவுகளுக்கு என்ன நடந்துள்ளது என்பதை தெளிவாகக் கூறாவிட்டால் அவர்களுடைய உறவினர்கள் தொடர்ந்தும் கண்ணீர் வடித்தவாறு தேடிக் கொண்டேயிருப்பர். எனவேதான் காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தை அமைத்து அதில் காணாமல் போனவர்கள் என்ன ஆனார்கள் என்பதை அறிக்கையாக தயாரித்து வெளியிடும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.

காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகமொன்றை அமைப்பதற்கு பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை விரைவில் அமைத்து காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு தெளிவான நிலைப்பாடொன்று அறிவிக்கப்பட வேண்டும். எனினும், இந்த அலுவலகம் தொடர்பில் சில இராணுவத்தினர் சந்தேகத்தை விதைத்துள்ளனர். இந்த அலுவலகத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் தொடர்புபட்ட இராணுவத்தினரை யுத்த குற்ற நீதிமன்றத்துக்கு இழுக்கப் போவதாகக் கூறப்படுகிறது. அப்படியான எந்தவொரு தேவையும் எமக்கு இல்லை. இப்படிச் செய்யுமாறு எந்தவொரு சர்வதேசமும் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம், இந்த வருடத்துக்குள் அரசியலமைப்பு மாற்றமொன்று கொண்டுவரப்பட வேண்டும். புதிய அரசியலமைப்பாக இருக்கலாம் அல்லது அரசியலமைப்பு திருத்தமாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் இது அமைய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் சிங்கள தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே தமது உரிமைகள் அரசியலமைப்பின் ஊடாகவே உறுதிப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

“எமது கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் 13ஆவது திருத்தம் போதாதா எனக் கேட்கின்றனர். 13ஆவது திருத்தச்சட்டம் போதுமானது இல்லை என்பதாலேயே கடந்த 30 வருடங்களாக யுத்தம் தொடர்ந்தது. இவ்வாறான நிலையில் தற்பொழுது 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தினால் போதாதா எனக் கேட்கின்றமை வேடிக்கையாக உள்ளது”என்றார்.

சிறந்ததொரு அரசியல் தீர்வை நான் முன்வைக்க நடவடிக்கையெடுத்தபோது பிரபாகரன் அதனை விரும்பவில்லை. எனது யோசனைத் திட்டத்துக்கு 7 வாக்குகளே குறைவாகக் கிடைத்தன. இத்தீர்வுத் திட்டம் தொடர்பில் ஏழு மாதங்களில் 33 பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தேன். அன்று இதனை எதிர்த்தவர்கள் இன்று அரசாங்கத்தில் எம்முடன் இருக்கின்றனர். சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு சிறந்ததொரு பொற்காலம் தற்பொழுது ஏற்பட்டுள்ளது எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மேலும் தெரிவித்தார்

0 Kommentare:

Kommentar veröffentlichen