நாடெங்கிலும் டெங்கு நோய் தீவிரம் – மன்னாரில் 193 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

மன்னார் பொது சுகாதார
வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரையிலான இரு மாதங்களில் 193 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் தெரிவித்தார்.

நாடெங்கிலும் டெங்கு நோய் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஜனவரி மாதம் 148 டெங்கு நோயாளர்களும், பெப்ரவரி மாதம் 45 டெங்கு நோயாளர்களும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு பின் வீடு திரும்பியுள்ளனர்.

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் டெங்கு நுளம்பின் தாக்கம் பரவலாக காணப்படுவதாகவும், கடந்த காலங்களை விட தற்போது டெங்கு நுளம்பின் தாக்கம் சற்று குறைவடைந்து காணப்படுகிறது.

டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவாக தமது வீடுகள் மற்றும் சூழலை வைத்திருந்த 10 பேருக்கு எதிராக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையூடாக மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதோடு, மன்னார் பொலிஸாரினால் 6 பேருக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

இதேவேளை மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நுளம்பின் பெருக்கத்திற்கு காரணமாக காணப்பட்ட 300 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்திற்கு அமைவாக இதுவரை 270 பேர் தமது வீடுகள் மற்றும் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தி டெங்கு நுளம்பு பரவாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை ஏனைய 30 பேர் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.

அவர்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

0 Kommentare:

Kommentar veröffentlichen