கேப்பாபிலவில் காணிகள் விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும்: ஜனாதிபதியிடம் சம்பந்தர் திட்டவட்டம்!

கேப்பாபிலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் கோரிக்கைகளுக்கு இரண்டொரு தினங்களுக்குள் தீர்வு கணப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் இருப்பினும் மக்கள் தங்களுடைய சொந்தக் காணிகளில் கால் பதிக்கும்வரை அவர்களுடைய போராட்டம் தொடரும் எனத் தான் ஜனாதிபதியிடம் தெரிவித்திருப்பதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கேப்பாபிலவு மற்றும் புதுக்குடியிருப்பு விவகாரம் தொடர்பில் ஐனாதிபதியுடன் இன்று(திங்கட் கிழமை) இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் விளக்கமளிப்பதற்காக ஏற்பாடு செய்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை எதிர்க் கட்சித் தலைலர் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பு தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,

“கேப்பாபிலவு, புதுக்குடியிருப்பு மக்கள் தங்களுடைய சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி சுமார் ஒரு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேப்பாபிலவில் 54 காணிகளுக்கு அரசாங்கத்தினால் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அவற்றுள் 42 காணிகளுக்கான பத்திரங்கள் முல்லைத்தீவு அரசாங்க அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்டுமுள்ளது.
அதேவேளை, யுத்தம் நிறைவடைந்ததை தொடர்ந்து மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட போது சம்மந்தப்பட்டவர்களுக்கு வேறு இடங்களில் காணிகள் வழங்கப்பட்டு வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மக்கள் தங்களுடைய சொந்த இடங்களுக்கு செல்ல விரும்பினால் தற்போது வழங்கப்பட்டுள்ள இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்படாக இருக்கின்றது.
எனவே, மக்களின் விருப்பத்தை அறிந்து, அவர்கள் விரும்புகின்ற காணிகளில் அவர்கள் குடியமர்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதேபோன்று, புதுக்குடியிருப்பை பொறுத்தவரையில் 19 பேருக்கு சொந்தமான 16 ஏக்கர் காணி இராணுவத்தினரிடம் இருக்கின்றது. அவற்றை மக்களிடம் ஒப்படைப்பதற்கு இராணுவம் தயாராகவே இருக்கின்றது.
ஆனால், அவர்களுக்கு மாற்றிடம் ஒன்று தேவை என்ற ரீதியில் வன இலாகாவிற்கு சொந்தமான காணி இனங்காணப்பட்டுள்ளது. அதனை முறைப்படி இராணுவத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி சம்மந்தப்பட்டவர்களுக்கு உத்;தரவிட்டுள்ளார். எனவே அந்த காணிகளும் விரைவில் விடுவிக்பபடும்” என எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்கள் முன்னிலையிலேயே சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி தேவையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதுடன், எதிர்வரும் 4 ஆம் திகதி தான் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதால் அதற்கு முன்னர் இந்த பிரச்சினைகள் நிறைவடைய வேண்டும் என உத்தரவிட்டதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்

0 Kommentare:

Kommentar veröffentlichen