அரசாங்கம் கேப்பாப்புலவு மக்களின் கோரிக்கைகளை உதாசீனம் செய்வது முறையல்ல: அனந்தி சசிதரன்

பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க வலியுறுத்திக் கேப்பாப்புலவு மக்கள் தொடர் போராட்டத்தை இரவு பகலாக முன்னெடுத்து வரும் நிலையில் நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற தற்போதைய அரசாங்கம் குறித்த மக்களின் கோரிக்கைகளை உதாசீனம் செய்வது முறையல்ல.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க இலங்கை அராசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்தத் தமிழ்மக்களின் எதிர்பார்ப்பாகும் என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் நில மீட்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வலி. வடக்கு மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். காங்கேசன்துறை வீதியில் மல்லாகம் பழம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை மேற்கொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட பின் பிரத்தியேகமாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்றாவது நாளே நான் அங்கு சென்று பார்வையிட்டு அந்த மக்களுக்கு எனது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தேன்.
போராட்டத்தில் பங்கேற்றுள்ள மக்களுக்கு லண்டனைச் சேர்ந்த நிறுவனமொன்றின் ஊடாக இரண்டு தடவைகள் சமைத்த உணவுகளை வழங்கியிருந்தோம்.
கடந்த மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கடுமையான அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும் நாங்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டோம்.
ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருட காலம் வரை நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு போராட்டங்களையும் எமது மக்கள் முன்னெடுக்கவில்லை.
ஆனால், அரசாங்கத்தின் ஏமாற்றுச் செயற்பாடுகளில் எமது மக்கள் கொண்ட அதிருப்தி காரணமாக நில விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனவர்களுக்கான நீதி என்பன கோரித் தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் எமது மக்கள் அடுத்தடுத்துப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்ட பல விடயங்களைக் கூட இன்னும் நிறைவேற்றாத சூழலில் பாதிக்கப்பட்ட மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 27ஆம் திகதி கூடும் ஐக்கியநாடுகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என நம்புகிறேன் என்றார்.

0 Kommentare:

Kommentar veröffentlichen