ஒரு துண்டு சொந்த மண் வேண்டும்! – விமலேந்திரன் பாரதிதாஸ்

தனி நாடு வேண்டி வீரஞ்செறிந்த அறப்போர்புரிந்த எம் மக்கள்
தம் காணிநிலத்தையாவது தாருங்கள்
என கையேந்தி நிற்கின்றனர்.

காடேகிய பாண்டவர்கள் இனி களம் திரும்புவர்!
தலைவிரி கோலமாய் வீட்டைத்துறந்து
வீதியில் உறங்கும் பத்தினித் தெய்வங்களின் கூந்தலை
கொட்டமடிக்கும் கொடியவனின் குருதியால் கழுவி கொண்டையிடுவர்!
எதிரிக்கு துணைசென்று- எம்
உயிர் தாய்நிலத்தை கபடத்தால் சூறையிட்ட
துச்சாதன துரோகிகளை
பள்ளிக்கு போக வழியற்று வெய்யில் குளிக்கும்
என் பிள்ளைகள் நாளை
தன் வில்லுக்கு இரையாக்கி
நந்திக் கடலில் கரைப்பர்!
எமக்கான நிலமென்பது…
விமானம் ஓடவோ முகாமிடவோ அல்லது
தொழில்செய்து பிழைக்கவோ அல்ல!
வயலும் இல்லை எமக்கும் வரப்புமில்லை!
நாங்கள் சுதந்திரமாய் சாக
ஒரு துண்டு சொந்த மண் வேண்டும்!
எங்கள் சாம்பரில் இந்த மண் பிறந்தது!
எம் மண்ணில் சாவது கொடுப்பினை!
மண்ணிற்காக சாவது தவப்பயன்!

0 Kommentare:

Kommentar veröffentlichen