அலரிமாளிகை பேச்சு – 02 03 04 – அ.ஈழம் சேகுவேரா



‘காணாமல் ஆக்கப்பட்டோர் – அரசியல் கைதிகள் இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பாகவும், சிவில் சமுக வெளியிலிருந்து பாதிக்கப்பட்ட மக்கள் நாங்களும், இவர்களும் (த.தே.கூட்டமைப்பு) முன்வைக்கின்ற கோரிக்கைகள் பரிந்துரைகளுக்கு இடையே ஏகப்பட்ட முரண்பாடுகள் உண்டு.

நாங்கள் சமஸ்டி என்றால் இவர்கள் ஒன்றுபட்ட இலங்கை என்கிறார்கள். நாங்கள் சர்வதேச விசாரணை என்றால் இவர்கள் உள்ளக விசாரணை என்கிறார்கள். நாங்கள் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு என்றால் இவர்கள் புனர்வாழ்வு என்கிறார்கள். நாங்கள் தமிழர் தாயக பிரதேசங்களிலிருந்து இராணுவ வெளியேற்றம் என்றால் இவர்கள் படைக்குறைப்பு என்கிறார்கள். இப்படி ஏகப்பட்ட அடிப்படை முரண்பாடுகளை கொண்டிருக்கும் இவர்களையும் வைத்துக்கொண்டு எப்படி பேசுவது? தயவுசெய்து வெளியேற்றுங்கள்.’ என்று வலியுறுத்தினோம்.

(தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் அறிக்கையிலிருந்து ஒரு பகுதி…



அலரிமாளிகை #பேச்சு – 03

அணு குண்டு உற்பத்தியில் இலங்கை! கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம்:

இதன்போது குறுக்கிட்ட பொலிஸ்மா அதிபர் புஜித் ஜயசுந்தர, ‘இப்படி நீங்கள் சொல்லக்கூடாது. நீங்கள் சாகும்வரை உண்ணாவிரதமிருந்தபோது சம்பந்தன் ஐயா என்னை நேரில்கண்டு சந்தித்து, நீங்கள் இந்தப்பிரச்சினைக்கு ஒரு நல்ல முடிவை எடுக்காவிட்டால் தானும் உண்ணாவிரதத்தில் இருக்கப்போவதாக கூறி விடாப்பிடியாக இருந்தார். நாங்கள் தான், இல்ல ஐயா… பேசி சுமுகமாக முடிவு காணலாம் என்று கூறி, அவரது முடிவை மாற்ற வைத்தோம். அவர் தனது முதுமை மற்றும் நோயைப்பாராமல் உங்களுக்காக இந்த கடினமான முடிவை எடுத்திருந்தார்.’ என்று தெரிவித்தார். (பொலிஸ்மா அதிபரின் பேச்சைக்கேட்டதும், உலக நாடுகளுக்கு தெரியாமல் இலங்கையும் மறைமுகமாக அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டு அணு வல்லரசு ஆக முயற்சித்துக்கொண்டிருக்கும் இரகசியத்தை நம்மால் அறிந்துகொள்ள முடிந்தது.)

பொலிஸ்மா அதிபரின் இந்தப்பேச்சுக்கு, ‘நாங்கள் புத்திர சோகத்தோடும் நெஞ்சமெல்லாம் வலியோடும் இங்கு வந்துள்ளோம். நீங்க வேற… சும்மா காமடி பண்ணாதீங்க சேர்.’ என்று எமது குழுவிலிருந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாயார் ஒருவர் ஏளனச்சிரிப்போடு பதில் கூறினார்.

(தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் அறிக்கையிலிருந்து ஒரு பகுதி…)


அலரிமாளிகை #பேச்சு – 04

14 ஐ தாண்டக்கூடாது. சுமந்திரன் எம்.பி அரசுக்கு கட்டளை!

ஒரு குறிப்பிட்ட 14 முதல் 15 பேர் கொண்ட குழு எங்களை வெளியேறிச்செல்லுமாறு கூறமுடியாது. (அமைச்சர் ருவானை பார்த்து சுமந்திரன் கூறுகின்றார்) இவர்கள் வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்களின் பரந்துபட்ட சமுக பிரச்சினையை பற்றி இங்கு பேசமுடியாது. அந்த அதிகாரமும் மக்கள் ஆணையும் எங்களுக்குத்தான் உண்டு. இவர்கள் இந்த 14,15 பேரும் வேண்டுமானால், தங்களுடைய தனிப்பட்ட பிரச்சினையை பற்றி மட்டும் இங்கு பேசலாம்.

சுமந்திரன் எம்.பி குனிந்து, அமைச்சர் ருவானின் காதுக்குள் ஏதோ கிசுகிசுத்துவிட்டு செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, சாள்ஸ் நிமலநாதன் எம்.பி இருவரையும் ‘வாங்கோ போவம்’ என்று அழைத்துக்கொண்டு வெளிக்கிளம்பிச்சென்றார்.

இவர்கள் மூவரும் வெளியேறிச்சென்ற பின்னர் அமைச்சர்கள், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 14 குடும்பங்களின் பிரச்சினைகள் தொடர்பில் மட்டும் பேசிக்கொண்டிருந்தனர். ‘இலங்கைக்குள் காணாமல் ஆக்கப்படல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள முப்பத்து இரண்டாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு நீதியும் தீர்வும் கேட்டு, நாங்கள் இங்கு பேசவந்துள்ளோம். தயவுசெய்து நீங்கள் எமது போராட்டத்தை இப்படி குறுக்கி சிறுமைப்படுத்தி பேசிவிட்டுப்போக முடியாது.’ என்று எமது பலத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும் அமைச்சர்களுக்கு தெரிவித்தோம்.

(தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் அறிக்கையிலிருந்து ஒரு பகுதி…)

0 Kommentare:

Kommentar veröffentlichen