உயிரினம் வாழத்தக்க புதிய “பூமிகள்” நாசா கண்டுபிடிப்பால் பரபரப்பு!

வாஷிங்டன், பிப்.23- சுமார் 40 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால், ஒரு சிறிய நட்சத்திரத்தைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும் 7 கிரகங்களில் குறைந்தபட்சம் மூன்று கிரகங்களில் உயிரினங்களுக்கான வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவின் நாசா விண் ஆய்வுக்கழகம் பரபரப்பான தகவலை அறிவித்திருக்கிறது.
இந்தக் கிரகங்கள் அளவில் பூமியை ஒத்ததாக உள்ளன. மேலும், இவை உயிரினப் பரிணாமங்களுக்கு உகந்த பாறைப் படிவ திடநிலை கிரகங்களாக அமைந்திருக்கின்றன என்று நாசா விஞ்ஞானிகள்  தெரிவித்தனர்.

மனிதர்கள் வாழ்வதற்கு உகந்ததாக இந்தக் கிரகரங்கள் இருக்கக்கூடும் என்ற அபிப்ராயம் பரவியதால் இது சமூக வலைதளங்களில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விண் தொலை நோக்காடியான ‘ஸ்பிட்சர்’ தொலைநோக்காடி இந்த நட்சத்திரம் சார்ந்த குடும்பத்தை கண்டுபிடித்தது. மேலும் பூமியிலுள்ள இதர தொலை நோக்காடிகளின் வழி இது மறு உறுதிப்படுத்தப்பட்டது என்று நாசா விஞ்ஞானி நிக்கோல் லெவிஸ் நேற்று மிகப்பெரிய செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றில் அறிவித்தார்.

பூமியைப் போன்ற சூழலைக் கொண்ட அதாவது, உயிரினங்கள் இருப்பதற்கான அல்லது தோன்றுவதற்கான வாய்ப்பினைக் கொண்ட கிரகங்கள் சிலவற்றை கடந்த காலங்களில் நாசா கண்டுபிடித்து அறிவித்துள்ளது என்றாலும் இந்தப் புதிய கண்டு பிடிப்பு முற்றிலும் மாறுபட்ட ஒன்று என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
வேற்றுக் கிரகங்களில் உயிரினங்களைத் தேடும் முயற்சிகளுக்கு இந்தக் கண்டுபிடிப்பு புதிய உந்துதலை ஏற்படுத்தி இருப்பதாக அறிவியல் உலகம் கருதுகிறது.

ஒட்டுமொத்தமாக, இந்த நட்சத்திரக் குடும்பத்திற்கு ‘டிராப்பிஸ்ட்-1’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள 7 கிரகங்களும் பூமியை ஒத்தவை என்றாலும் அதில் மூன்று மிக மிகப் பொருத்தமானவை எனக் கருதப்படுகின்றன.
ஏனெனில், இந்த மூன்று கிரகங்கள், கடல்களைத் தக்க வைத்துக்கொள்ளக் கூடியவையாக தோன்றுகிறது. இதன் பாறைப் படிவங்களும் நீர் ஆதாரங்களைத் தக்கவைக்கும் திறனும் மனிதர்கள் வசிப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கு உதவக்கூடியவை என்று நாசா அறிவியல் பணித் துறையின் நிர்வாகி தோமஸ் ஷுர்பக்சென் தெரிவித்துள்ளார்.

எனவே, பூமிக்கு அப்பால் இன்னொரு பூமியை நாம் வெகு விரைவில் கண்டுபிடித்து விடுவோம். அது, இந்த மூன்று கிரகங்களில் ஒன்றாகக் கூட இருக்கலாம் என அவர்  தெரிவித்திருக்கிறார்.
இந்த டிராப்பிஸ்ட்-1 கிரகக் கூட்டமைப்பு நமது சூரிய குடும்பத்தின் இயல்பைக் கொண்டுள்ளது. நமது சூரியன் கிட்டத்தட்ட 460 கோடி ஆண்டு வயதைக் கொண்டது என்றால் புதிதாக கண்டிபிடிக்கப்பட்டுள்ள கிரகங்களைக் கொண்ட அந்த நட்சத்திரம் 500 கோடி ஆண்டு வயதைக் கொண்டது.

இந்த நட்சத்திரதிற்கு மிக அருகில் இந்த 7 கிரகங்களும் சுற்றி வருகின்றன. அதேவேளையில், இந்த நட்சத்திரம் நமது சூரியனை விட அளவில் சிறியது என்பதால் கிரகங்கள் மீதான வெப்பத் தாக்கம் பூஜ்ஜியம் செல்சியஸில் இருந்து 100 செல்சியஸிற்குள் தான் இருக்கிறது.
அடுத்து விரைவில் விண்வெளியில் செயல்படவிருக்கும்  மிகப்பெரிய இரண்டு விண் நோக்காடிகள் முழுமையாக செயல்படும் போது குறிப்பிட்ட அந்த மூன்று கிரகங்களின் உட்புறங்களையும் நாம் ஊடுருவிப் பார்க்க முடியும். உயிர்க்கூறுகளின் தடயங்கள், ஆக்ஸிஜன், மற்றும் அதன் தெளிவான புறச்சூழல்களை நாம் கண்டுகொள்ள முடியும் என்று நாசா கூறுகிறது.

0 Kommentare:

Kommentar veröffentlichen