இலங்கை ஆவணப்படம்: லெனாவுக்கு தண்டனையா? குலா கண்டனம்!

ஈப்போ,பிப்.25- இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப் படுகொலை தொடர்பான ஆவணப் படம் ஒன்றை திரையிட்டதற்காக புசாட் கொமாஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லெனா ஹென்றி நீதிமன்றத்தினால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டிக்கப் படவிருப்பதற்கு ஈப்போ பாராட் எம்.பி. குலசேகரன் தம்முடைய ஆட்சேபத்தைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்த இன அழிப்பை மூடி மறைப்பதற்கு உதவுவதைப் போன்ற ஒருநிலை காட்டுவதாக இது அமைந்துள்ளது. நமது நீதித்துறையின் அணுகுமுறை நீதிக்கு புறம்பான உணர்வையே ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர் தமது அறிக்கையில் கூறினார்.
ஒரு படத்தைக் காட்டியதற்காக் லேனா ஹென்றி தண்டிக்கப்படும் நிலைக்கு ஆளாகி இருப்பது அவருடைய கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என்று தென்கிழக்காசிய மனித உரிமை ஆணையத்தின் இடைக்கால பிரதிநிதி லாரெண்ட் மெய்லியன் கூறியிருக்கிறார் என குலசேகரன் சுட்டிக்காட்டினார்.
அனைத்துக மனித உரிமைச் சட்டத்திற்கு ஏற்ப லேனா ஹென்றிக்கு எதிரான வழக்கை, மலேசிய அரசு மறுபரிசீலனை செய்யப்படவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது நடந்த அட்டுழியங்கள் தொடர்பான அந்த ஆவணப்படத்தை போட்டுக் காட்டியதற்காக அவர் தண்டிக்கப்படுவது, மலேசியா இத்தகைய மனித உரிமைக்கு எதிரான அட்டூழியங்களை எத்தகைய கண்கொண்டு பார்க்கிறது என்பதை புலப்படுத்துவதாக உள்ளது என்றார் அவர்.
சம்பந்ந்தப்பட்ட அந்த ஆவணப்படம், இணையத்தில் தாராளமாக காணக் கிடைக்கிறது. மேலும், இதே படம் மலேசிய நாடாளுமன்றத்திலும் போட்டுக் காட்டப்பட்டுள்ளது என்று குலசேகரன் விளக்கினார்.
பாலஸ்தீனம், போஸ்னியா, அண்மையில் மியன்மார் ரொஹின்யா ஆகியோர் விவகாரங்களில் அனைத்துலக மனித உரிமை நடைமுறையைப் பின்பற்றுகிற மலேசியா, இலங்கை விவகாரத்தில் மாற்றிப் புரிந்துகொள்வது ஏன்? என அவர் கேள்வி எழுப்பினார்.
நம்முடைய எல்லைக்கு அப்பால் நடந்த கொடுமையான மனித உரிமை அத்துமீறல்களை ஒரு மனித உரிமைவாதி என்ற முறையில் லெனா ஹென்றி எடுத்துக் காட்ட முயன்றதற்காக அவரைத் தண்டிப்பது சரியா? என்று குலசேகரன் வினவினார்.
இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழ் சமுதாயத்தினர் விஷயத்தில் மட்டும் மலேசிய இரட்டை அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது ஏன்? அவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்பதற்காகவா? என குலசேகரன் கேட்டார்.

0 Kommentare:

Kommentar veröffentlichen