மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

தமிழ் மக்களை இன அழிப்பு செய்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்ட போதும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் வலுக்கட்டாயமாக படைத்தரப்பை அரசு நிறுத்தியுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

கேப்பாப்புலவு மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போராட்டம் தொடர்பில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் நேற்று ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும்,

கடந்த இருபது நாட்களிற்கு மேலாக தமது இருப்பியலுக்கான வாழ்வுரிமைப் போராட்டத்தை முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் மேற்கொண்டு வருவதை தாங்கள் அறியாமல் அல்ல.

சனநாயக ரீதியில் வாழ்வுரிமைக்கான அறவழிப் போராட்டத்தை ஒரு சனநாயக அரசு அங்கீகரிக்க வேண்டியதே அதன் தார்மீக பொறுப்பு ஆகும். ஆனால் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள மக்களுக்கு ஒரு நீதியும் தமிழ் மக்களுக்கு மற்றொரு நீதியுமே இலங்கையில் ஆட்சியாளர்களால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

தமிழ் மக்களை இன அழிப்புச் செய்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்ட போதும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் வலுகட்டாயமாக படைத்தரப்பை நிறுத்தியுள்ளீர்கள்.

தமிழ் மக்களை வகை தொகையின்றி படுகொலை செய்த படைத்தரப்பு எமது பூர்வீக நிலங்களை அபகரித்து சுகபோகம் அனுபவிக்க நாம் விரக்தியடைந்து வீதியில் நின்று போராடும் நிலையை ஏற்படுத்திவிட்டீர்கள்.

உங்கள் நல்லாட்சி எனும் குள்ளாட்சிக்கும் மகிந்தராஜபக்சவின் சர்வாதிகார ஆட்சிக்கும் என்ன வித்தியாசம். அவர்கள் முகத்தில் குத்தினார்கள். நீங்கள் எமது வாக்கால் அரியணை ஏறி எம்மை அடியோடு கறுவருக்க முனைகிறீர்கள்.

வடகிழக்கிலேயே பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் எதற்கு படைத்தரப்பு?. இவ்வாறு தான் கடந்த காலங்களிலும் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டதன் விளைவே ஆயுத கலாச்சாரம் தோற்றம் பெற்றது.

தமிழ் மக்கள் இலங்கையர்களாக வாழ்வதில் வெறுப்பும் ஏற்பட்டது. எமக்கு அயல்நாட்டு மன நிலமையை உருவாக்கியதும் உங்கள் செயற்பாடுகளே சனநாயக கோரிக்கையை ஏற்க மறுக்கும் அரசாங்கம் எப்படி மக்களாட்சியை தொடர முடியும் தமிழ் மக்களின் ஜனநாயக கோரிக்கைகளை தொடர்ந்து அலட்சியப்படுத்தி அவமானப்படுத்துவது தொடர் தேர்ச்சியாக வாடிக்கையாகிவிட்டது.

நீங்கள் தமிழ் அரசியல்வாதிகளை ஏமாற்றுவது போல் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் ஒரு போதும் இலக்கு மாறியவர்கள் அல்ல. சகல நிலைகளிலும் தமிழ் மக்களை விரக்தியடைய வைத்து விட்டீர்கள்.

நல்லிணக்கம் என்பது சமநிலை பகிர்வுறவாடலிலேயே தங்கியுள்ளது. மேட்டிமைவாத ஏகாதிபத்தியத்தால் இன நல்லுறவு மேம்பட போவதில்லை.

எம்மை தொடர்ந்து தோற்கடிக்கப்பட்ட இனமாக கருதுகிறீர்கள். நாம் உயர்ந்த இலட்சியத்துடன் உன்னதமான விடுதலைக்காக போராடிய இனம் என்பதனையும் மறந்துவிடாதீர்கள்.

எனவே காலம் தாமதித்து நீதியை நீர்த்துப்போக வைத்து நீர்க்குமிளியாக்காமல், நீதியின் பால் நியதியை காட்டுங்கள். அறம் வெல்லும் என நிறைவாக நம்புகின்றோம் எனவே கேப்பாப்புலவு, புதுக்குடியிருப்பு ஆகிய எமது பூர்வீக நிலங்களில் இருந்து படைத்தரப்பை வெளியேற்றுங்கள்.

ஜனநாயக மரவுகளிற்கு மதிப்பளியுங்கள். அது தான் ஜனநாயக மக்களாட்சி சட்டவாக்கத்தின் நேரிய ஒழுக்க பண்பாகும். ஆகவே எமது உரிமையை வழங்குங்கள் சலுகையை எதிர்பார்க்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் என தயவுடன் கேட்டுக்கொள்ளுகின்றோம் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Kommentare:

Kommentar veröffentlichen