கேப்பாபுலவு காணி மீட்பு போராட்டம் : கொள்கையில் மாற்றமில்லை !!!!

எமது உறவுகள் என்ற எண்ணம் இளைஞர்களுக்கு இருக்குமானால் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க கேப்பாபுலவில் 25 ஆம் திகதி ஒன்றுகூடுமாறு இன்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பில் இடம்பெற்றுவரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புலவுக்குடியிருப்பு இராணுவ முகாமிற்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

விமானப்படையினர் நிலைகொண்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் இன்று 23 ஆவது நாளாக தொடர்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 31 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தீர்வின்றிய நிலையில் இன்றும் தொடர்கின்றது.

குறித்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருவதுடன், கவனயீர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இன்றும் விமானப்படையினரின் முகாமிற்கு முன்னால் ஒன்று திரண்ட மக்கள் காணிகளிலிருந்து விமானப்படையினரை வெளியேறுமாறு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் எதிர்வரும் 25 ஆம் திகதி புலவுக்குடியிருப்பில் இளைஞர்களை ஒன்று கூடி போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

இதேவேளை தமது காணிகள் பொருளாதார வளம் நிறைந்த காணிகள் என்பதாலேயே தமது காணிகளை விமானப்படையினர் கையளிப்பதற்கு மறுப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

காணியில் கால் பாதிக்கும் கொள்கையில் மாற்றமில்லாத நிலையில் தமது காணி மீட்பு போராட்டத்தை இன்று 23 ஆவது நாளாகவும் கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 31 ஆம் திகதி விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட தமது காணிகளை தம்மிடம் மீள வழங்க வேண்டும் எனக் கோரியே மக்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பிலவுக்குடிருப்பிலுள்ள இராணுவ முகாமிற்கு முன்னால் வீதி அருகில் முகாமிட்டு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

மக்களின் இந்தப் போராட்டங்களை முடக்குவதற்கு படையினர் பல்வேறு கைங்கரியங்களை மேற்கொண்ட போதிலும், தமது காணியில் கால்பதிக்கும் வரை அங்கிருந்து வெளியேறப் போவதில்லை என மக்கள் சூளுரைத்துள்ளனர்.

கேப்பாபுலவு மக்களின் இந்தப் போராட்டத்திற்கு வடக்கு கிழக்கு பகுதியில் இருந்து மாத்திரமல்லாமல் தென் பகுதியில் இருந்தும் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மக்கள் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.

இதேவேளை கடுமையான பனியுடன் கூடிய காலநிலைக்கு மத்தியிலும் தமது பிள்ளைகள் சகிதம் கேப்பாபுலவு மக்கள் நிலமீட்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பாடசாலை மாணவர்களின் கல்வி செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Kommentare:

Kommentar veröffentlichen