கேப்பாப்புலவு மக்களின் காணிமீட்பு போராட்டமும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களின் எதிர்ப்பார்ப்பும் கிழக்கில் நடைபெறும் எழுக தமிழ் பேரணியை நியாயப்படுத்தியுள்ளது. எனவே இப்பேரணி தொடர்பில் விமர்சிப்பதற்கோ அல்லது வேண்டாம் என கூறுவதற்கோ எவருக்கும் உரிமை கிடையாது என தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கனேசன் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயே காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் அனைத்தும் நடைபெற்றன. அந்நேரத்தில் காணாமல் ஆக்கப்படும் சம்பவங்களுக்கெதிராக நாம் போராடியிருக்காவிட்டால் இந்நேரம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொகை இரட்டிப்பாகியிருக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கில் நடைபெறும் எழுக தமிழ் போராட்டம் தொடர்பிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அளித்த முறைப்பாடு குறித்தும் அமைச்சரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வடக்கில் தொடர்ந்தும் காணி ஆக்கிரமிப்புக்கள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. தற்போது யுத்தம் முடிந்து பல வருடங்கள் ஆகின்றன. ஆனாலும் தொடர்ந்து அதி பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் நில ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறுவது வருத்தமளிக்கின்றது. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் குறித்த நிலங்கள் பாதுகாப்பு தேவைக்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் தற்போது அவ்வாறான தேவை எதுவும் அங்கு காணப்படவில்லை. தற்போது அதிபாதுகாப்பு வலயங்களும் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளையும் விடுவிக்க வேண்டிய காலம் உதயமாகியுள்ளது.
வடக்கில் இராணுவத்தை குறைப்பது வேறு வகையாக நோக்கப்பட வேண்டிய விடயமாகும். அதேபோல் மக்களின் காணிகளை விடுவிப்பது என்பது வேறு விடயமாகும். பாதுகாப்புக்காக மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் கேப்பாப்புலவு மக்களின் காணி மீட்ட போராட்டத்துக்கும் நிச்சயம் தீர்வு கிடைக்கும்.
கடந்த அரசாங்கத்திலேயே அதிகளவிலானோர் காணாமல் ஆக்கப்பட்டனர். நாம் அந்நேரத்தில் அரசாங்கத்துக்கெதிராக கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தோம். அந்நேரத்தில் நாம் காணாமல் ஆக்கப்படும் சம்பவங்களுக்கெதிராக போராடியிருக்காவிட்டால் தற்போது குறித்த தொகை இரட்டிப்பாகியிருக்ககூடும் என்பதை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கு தற்போது நாம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கான ஆணைக்குழுவை அமைக்க அமைச்சரவை பத்திரம் மீள்திருத்தத்துடன் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இது வெகுவிரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும். எனவே வடக்கில் தற்போது பூதாகரமாக்கியுள்ள கேப்பாப்புலவு மக்களின் காணிமீட்பு போராட்டமும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் எதிர்ப்பார்ப்பும் கிழக்கில் நடைபெறும் எழுக தமிழ் பேரணியை நியாயப்படுத்தியுள்ளது.
வடக்குஇ கிழக்கு மக்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தே அந்த பேரணியை மேற்கொள்கின்றனர். அவர்களின் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட வேண்டும். எழுக தமிழ் போராட்டம் வடக்குஇ கிழக்கு மக்களின் உரிமைக்குரலாக மாற்றமடைந்துள்ளது. எனவே இப்பேரணி தொடர்பில் விமர்சிப்பதற்கோ அல்லது வேண்டாம் என கூறுவதற்கோ எவருக்கும் உரிமை கிடையாது என்றார்.
0 Kommentare:
Kommentar veröffentlichen