மறக்கத்தகுமோ 17.02.2017 லெப் கேணல் தவா/தவம்

" நிதர்சனம்" பிரிவின் மகளிர் பகுதியில் ஒரு படப்பிடிப்பு கலையகம். புலிகளின்குரல் அறிவிப்பாளர் திருமாறன் மற்றும் பலருடன் நானும் அந்த கவிப்பயணப் படப்பிடிப்புக்காக சென்றிருந்தேன். ஏற்பாடுகள் நிறைவாகி படப்பிடிப்பு ஆரம்பிக்கும் போது ஒளிப்பதிவாளராக இருந்த பெண் போராளி சலித்து கொள்கிறாள். "அக்கா லைட்டிங் பிரச்சனையா இருக்கு " நின்ற கலையக போராளிகள் முயற்சித்தும் அந்த படப்பிடிப்புத்தளத்தில் லைட்டிங் எனப்படுகிற ஒளியமைப்பு பிரச்சனைகள் வர எங்கோ பணியில் இருந்த மூத்த போராளியை வோக்கியில் அழைக்கின்றனர் பெண் போராளிகள்.

அப்போது திருமாறன் அண்ண கூறுகிறார் ஆள் வந்தா இப்ப எல்லாம் ஓகே ஆகும் பாரு தம்பி... அவர் கூறியதே நடந்தது. அவசரமாக வந்த வாகனத்தில் இருந்து புன்னகையுடன் வந்திறங்கிய முதுநிலை படப்பிடிப்பாளி குறித்த ஓரிரு நிமிடங்களில் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி இடுகிறான். அந்த இடத்தில் நிற்க கூட நேரமற்று ஒரு புன்சிரிப்புடன் "வாறனடா..." சரி அண்ண... இரு சொற்களுடன் எமது சம்பாசனை நிறைவுறுகிறது. அப்பிடித்தான் தவா அண்ண பணிக்கு பிறகு தான் மற்ற எதுவும்.

17 மாசித்திங்கள் 2008 தமிழீழ விடுதலைக்காக உழைத்துக் கொண்டிருந்த ஊடகப் பரப்பில் பெரும் இடைவெளி ஒன்று ஏற்பட்ட நாள். தமிழீழ விடுதலையில் வேட்கை கொண்டவனாக, சண்டைக் களங்களில் இந்திய மற்றும் சிங்கள இராணுவங்களை சிதறடித்து சின்னாபின்னமாக்கிய பெரு வீரம் தனது வாழ்வின் பெரும்பங்கை ஊடகப்பரப்புக்குள் விட்டுச் சென்றதை மறக்க முடியாது நினைவில் நிற்கும் நாள். தமிழீழ விடுதலைக்கான ஒவ்வொரு தடைக்கற்களையும் உடைத்தெறிந்து அதன் மீது வெற்றி என்ற பதிவை ஏற்படுத்துவதற்கு 1987 ஆம் ஆண்டு காலத்தில் இருந்து தன்னை முழுமையாக ஊடகங்களுக்காக அர்ப்பணித்த பெரு வேங்கையை நாம் இழந்த நாள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடகங்களின் பங்கு மிக மிக முக்கியமானது. எமது உணர்வுகளை, எமது வலிகளை, எமது போராட்டத்தின் தேவையை என விடுதலைப்போராட்டத்தின் ஒவ்வொரு விடயங்களையும் சர்வதேசத்திடமும் எமது மக்களிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டிய கடுமையான பணியை எமது ஊடகங்கள் சரியாகவே செய்து வந்தன. அத்தகைய தமிழீழ ஊடகங்களுக்கும் தவா என்றும் தவம் என்றும் அழைக்கப்படுகின்ற முகுந்தனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

1987 ஆம் ஆண்டு தேசியத்தலைவர் ஒரு ஒளியூடகத் தேவைக்கான கருத்துக்களை முன்வைத்த போது எந்த தயக்கமும் இன்றி கேணல் கிட்டு அவர்களால் உருவாக்கப்பட்டது நிதர்சனம் என்கின்ற ஒளியூடகம். அது உருவான காலப்பகுதியில் இருந்து இறுதிவரை நிதர்சனத்துக்கும் தவா என்கின்ற போராளிக்குமான உறவு மறக்கவோ மறுக்கவோ முடியாதது.

சாதாரணமாக சிறிய அளவிலான ஒளிபரப்பு சாதனங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நிதர்சனம் பரந்து விரிந்து அதி உச்ச ஒளிபரப்பு சாதனங்களுடன்
"தமிழீழ தேசியத் தொலைக்காட்சி " என்று சர்வதேச தரத்துடனான நிகழ்வுகளுடன் செய்மதிகள் ஊடாக ஒளிபரப்பாகியது வரை நிதர்சனத்தின் ஒவ்வொரு தடைக்கல்லையும் உடைத்தெறிந்த போராளிகளுள் மிக முக்கியமானவன் தவா.

ஒரு களப்படப்பிடிப்பாளனாக தனது ஊடகப் பணியை ஆரம்பித்த தவா, நிதர்சனத்தின் அத்தனை பணிகளிலும் தேர்ச்சி பெற்றவனாக வெற்றி கண்டான். தன்னை வளர்ப்பதில் மட்டுமல்லாது. தன் போராளிகளையும் வளர்த்தெடுப்பதிலும் புது தொழில்நுட்பங்களை கற்று தேர்வதற்கான முழு ஒழுங்குகளை செய்து வளர்த்தெடுக்கும் நல்லாசானாகவும் தவா இருந்தார்.

தமிழீழ வரலாற்றில் மறக்க முடியா தியாகங்களில் ஒன்றான தியாக தீபம் திலீபன் அவர்களது வரலாற்று உண்ணாநிலைப் போராட்டத்தை ஆவணமாக்கியதில் இருந்து களமுனைக்காட்சிகள் மற்றும் இனவழிப்பு செய்யப்பட்ட தமிழீழத்தின் அத்தனை பதிவுகளையும் ஆவணமாக்கி தமிழீழ வரலாற்றின் ஒளியாவணங்களுக்கு வழிதந்த மூத்த போராளி. இதுமட்டுமல்லாது, சர்வதேசமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் வரலாற்று முக்கியத்துவமான தமிழீழ தேசியத்தலைவரின் மாவீரர்நாள் உரையை பதிவாக்குவது என்ற வரலாற்றின் உச்சம் வரை தவா இல்லாத படப்பிடிப்புக்கள் நடந்ததில்லை.

"இந்திய அரச பயங்கரவாதம் என்ற தலைப்புடன் இரண்டு பாகங்களை அடக்கி இந்திய அரசுக்கே சவால் விட்ட விவரணப்படத்தை வெளியிட்ட நிதர்சனத்தின் பதிவாளனாக தவா செயற்பட்டிருந்தார். இந்தியப்படைகளின் பல நெருக்கடிக்குள்ளும் இந்த ஆவணப்படத்தை உருவாக்கி வெளியிட்டு பெரும் சாதனையை நிகழ்த்திய தவா ஒளிவீச்சு, குறும்படங்கள், ஆவணப்படங்கள், முழுநீளத் திரைப்படங்கள் என நிதர்சனத்தின் அத்தனை வெளியீடுகளிலும் தனது பணியை ஆற்றத் தவறியதில்லை.

"இமையின் வீரம்" என்ற போராளிகளின் உண்மை சம்பவத்தை வரலாறாக்கிய தமிழீழத் தொலைக்காட்சியின் தொடர் ஒன்றுக்கான படப்பிடிப்புக்கு நான் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்த போது தவா என்ற மூத்த போராளி என்னை நெறிப்படுத்தியதை நான் மறக்க முடியாது. சிறிய நேரம் வேறு ஏதோ வேலையாக வந்த தவா அண்ண குறுகிய நேரத்துக்குள் எம்மை வழிநடாத்தி சென்றது நிறைவே.

ஒளிப்பதிவாளனாக வாழ்ந்த தவா, மேஜர் கிண்ணியின் வரலாற்று ஆவணமான " இன்னுமொருநாடு " என்று ஆரம்பித்து மக்களின் வலிகளையும் அவர்களின் ஒன்றுபட்ட செயற்பாடுகளின் தன்மையையும் வெளிக்கொண்டு வந்த "விடுதலைமூச்சு" என்ற முழு நீளத்திரைப்படம் வரை முக்கிய பாத்திரங்களை ஏற்று சிறந்த நடிகனாகவும் வலம் வந்தார்.

தமிழீழத்தின் தலைநகரில் திரியாய் பகுதியில் நாராயணபிள்ளை மணவிணையரின் மகனாக பிறந்து தமிழீழ தேசத்துக்காக போராளியாகி சிறு காலத்திற்குள் தனது தந்தை உட்பட்ட 16 உறவுகளை சுட்டுக் கொன்ற சிங்களத்தின் இனவழிப்பை கண்டு பொறுக்க முடியாது தகித்துக் கொண்டிருந்த தவாவுக்கு தளபதி லெப்டினன் கேணல் புலேந்தி அம்மான் நல் வழிகாட்டியாக நல்லாசானாக பெற்றவராக அண்ணனாக என்று பல வடிவங்களில் தவாவை நெறிப்படுத்தினார். அவருடன் வளர்ந்த தவாவின் இறுதிக்காலங்கள் கலக்கம் தருபவை.

தமிழீழ தேசியத் தலைவரின் நேரடி நெறிப்படுத்தலில் நடந்த, சர்வதேசமே அதிர்ந்த அனுராதபுரம் விமானத்தள அழிப்பு நடவடிக்கையான "எல்லாளன்" நடவடிக்கையினை உடனடியாக ஆவணப்படுத்த வேண்டும் . தேசிய தலைவரிடம் இருந்து வந்திருந்த கட்டளை.

தவா தலமை போராளிகள் தயாராகின்றார்கள். பல நாட்கள் கண்விழித்து வரலாற்று முக்கியத்துவம் பெற்ற வெற்றிச்சண்டையை, விழிமூடி காற்றோடு கலந்துவிட்ட கரியபுலிகளின் சாதனைகளை ஆவணப்படுத்தும் முழுநீளத் திரைப்படத்துக்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார்.

அன்று பளைப்பகுதியில் படப்பிடிப்பு. இரு நாட்கள் தொடர்ந்த தூக்கம் இல்லாத படப்பிடிப்பு. படக்குழு களைத்து விட்டது சிறு ஓய்வு தேவைப்பட்டதால் அருகில் இருந்த மர நிழல்களில் அனைவரும் உணவுண்ணவும், ஓய்வெடுக்கவும் என்று அமர்ந்தனர். தவாவும் ஓய்வெடக்க என்று அமர்ந்தார் அப்பிடியே தூங்கி விட்டார். அதுவே அவரது நிரந்தர உறக்கமாகவும் போன கொடுமையை தமிழீழ மண் ஏற்றுக் கொள்ள முடியாது தவிக்கிறது.

பனை மர நிழலில் தூங்கிக் கொண்டிருந்த தவாவை சிங்களம் ஏவிய எறிகணைச்சிதறல் விழிமூட வைக்கிறது. தவா என்ற தமிழீழத்தின் பெரும் சொத்து, தான் நேசித்த தமிழீழத்தை, தமிழீழ ஊடகங்களை விட்டு அன்று பளைப்பிரதேசத்தில் தன் தமிழீழப்பணியை நிறுத்தி கொண்டது தவா என்ற ஊடகப் பணியாளன் விழி மூடி உறங்குகிறான்...

0 Kommentare:

Kommentar veröffentlichen