ஒரு மாத காலத்திற்குள் மீள்குடியேற்றாவிட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும்!

யாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருக்கும் மயிலிட்டி, காங்கேசன்துறை, பலாலி, ஊறணி, தையிட்டி ஆகிய கிராமங்களில் ஒரு மாத காலத்திற்குள் மக்கள் மீள்குடியேற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இல்லையேல் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி பாரிய மக்கள் போராட்டத்தை நடத்துவோம் என மேற்படி 5 கிராமங்களுக்குமான அபிவிருத்தி குழு சுட்டிக்காட்டியுள்ளது.

வலி.வடக்கு மீள்குடியேற்ற நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி குழு சுட்டிக்காட்டியிருக்கின்றது.

இது குறித்து குழு மேலும் கூறியுள்ளதாவது, 1990ம் ஆண்டு நாம் சொந்த நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டோம். பின்னர் 2012ம் ஆண்டு மக்கள் தங்கள் சொந்த நிலத்தை பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.
அப்போது ஆலயங்கள், பாடசாலைகள், மற்றும் மக்களுடைய வீடுகள் இடிக்கப்படாத நிலையிலேயே இருந்தது.

குறிப்பாக ஊறணி அந்தோனியார் தேவாலயம், மயிலிட்டி காணிக்கை மாதா தேவாலயம், மயிலிட்டி மருதடி பிள்ளையார் கோவில், போன்றவற்றில் மக்கள் பூசை வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது மக்களின் வீடுகளும் இருந்தன. அதன் பின்னர் திட்டமிட்டவகையில் படையினரால் மக்களுடைய வீடுகள் மற்றும் ஆலயங்கள் பாடசாலைகள் அழிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

எனவே மக்களுடைய வீடுகள் அழிக்கப்பட்டதற்கு அரசாங்கம் தலா 30 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும்.
இதேபோல் சொந்த நிலத்தை விட்டு வெளியேறி நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் மக்கள் கடந்த 27 வருடங்களாக மாதாந்தம் 3ஆயிரம் ரூபாய் கொடுத்து வாடகை வீடுகளிலேயே தங்கியிருக்கின்றனர்.
அவர்களுக்கு 27 வருடத்திற்கான வாடகை பணம் வழங்கப்பட வேண்டும். இதேபோல் கடந்த 27 வருடங்களாக மக்கள் அவல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

எனவே மக்களுடைய காணிகள் 1 மாதத்திற்குள் மக்களிடம் வழங்கப்பட வேண்டும் என மேற்படி 5 கிராமங்களையும் சேர்ந்த மக்கள் 2017.03.04ம் திகதி காங்கேசன்துறை நடேஷ்வரா கல்லூரியில் கூடி தீர்மானித்திருக்கின்றனர்.
இந்த தீர்மானம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
எனவே மக்களுடைய நிலம் 1 மாதகாலத்திற்குள் விடுவிக்கப்படாவிட்டால் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

0 Kommentare:

Kommentar veröffentlichen