‘கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக் கட்சி தான் வெளியேற வேண்டும்’

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக் கட்சி தான் வெளியேற வேண்டும். அதிலிருக்கக் கூடிய ஏனைய கட்சிகளல்ல” எனத் தெரிவித்துள்ள கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முண்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், “தமிழரசுக்கட்சி அவ்வாறு வெளியேறி ஏனையோர் கூட்டமைப்பை கொண்டு நடத்துவதற்கு வழிசமைக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

நேற்று (24) இடம்பெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போது, தமிழரசுக் கட்சியை தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்ற நிலையில், அதிலிருந்து வெளியேறுவீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலையே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைக்கு முற்று முழுதாக மாறான கொள்கையில் தமிழரசுக் கட்சி இருக்கின்றது. ஆகவே, கூட்டமைப்பிலிருந்த தமிழரசுக் கட்சியே வெளியேற வேண்டுமே தவிர அதிலிருக்க கூடிய ஏனைய கட்சிகள் வெளியேறவேண்டுமென்பதல்ல. இன்றிருக்கக் கூடிய நிலையில், தமிழரசுக் கட்சி தமிழ் மக்களுக்கு கொடுத்த அத்தனை உறுதி மொழிகளையும் மீறியிருக்கின்றது.

வட, கிழக்கு இணைப்பு இல்லை என்பதை தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அவ்வாறு எங்களுக்கு சொல்லப்பட்டிருக்கின்றது. இப்பொதைக்கு சாத்தியமில்லை என்று சம்மந்தனும் சுமந்திரனும் கூறுகின்றார்கள். ஆகேவே, அதனை எவ்வாறு எப்போது சாத்தியமாக்குவது என்பது தொடர்பான உத்திகளும் கிடையாது.

அதேபோல இலங்கையில் பௌத்தத்துக்கு முதலிடம் என்பதையும் சம்மந்தனும் சுமந்திரனுமே ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அதனை ஏனையோர் ஏற்றுக்கொண்டதாக இல்லை. ஆனால், குறைந்தபட்சம் வட, கிழக்கிலாவது சமத்துவமான நிலை இருக்க வேண்டுமென்றால், அதனையும் பேசுவதற்கு, அவர்கள் தயாராக இல்லை.

சமஷ்டியையும் விட்டக் கொடுத்துள்ளனர். இவ்வாறு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் உறுதிமொழிகள் எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டு இலங்கை அரசாங்கத்தக்குச் சாதகமாக அரசைப் பாதுகாக்கக் கூடிய வகையில் தான் அவர்களுடைய சகல செயற்பாடகளும் இருக்கிறது.

ஜெனிவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது கூட ஒரு சான்று தான். தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தின் ஒப்புதலுடன் தான் அது நடைபெற்றிருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில் கூட்டமைப்பை விட்டு வெளியேறுவது தமிழரசுக் கட்சி தான். அதிலிருக்கின்ற ஏனையோரல்ல என்றும் கூறினார்.

இதற்கமைய கூட்டமைப்பிலிருந்த தமிழரசுக் கட்சி வெளியேறி ஏனையோர் அதனை சரியான முறையில் கொண்டு நடத்துவதற்கு அவர்கள் வழிசமைக்க வேண்டும்” என்றார்.

0 Kommentare:

Kommentar veröffentlichen