துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் பலி அறிக்கை யாழ்.நீதிமன்றில் சமர்ப்பிப்பு

யாழ். கொக்குவில் குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணை அறிக்கை யாழ் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி கொக்கு வல் குளப்பிட்டிப் பகுதியால் சென்று கொண் டிருந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்  இருவர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.
இச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் அதனால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக சுன்னாகத்தினைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஸன் (வயது 24), கிளிநொச்சியினைச் சேர்ந்த நடராஜா கஜன்(வயது 23) என்பவர்கள் உயிரிழந்திருந்தனர்.
 
இச் சம்பவத்தினை அடுத்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 5 பொலிஸ் உத்தியோகஸ்தர்களுடைய பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில் அவர்கள் கைது செய்யப்ப ட்டு, அவர்களுக்கு எதிராக யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் குறித்த வழக்கு நேற்று மீண்டும் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
 
இதன் போது சந்தேக நபர்கள் 5 பேரும் மன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர். இவ் வழக்குத் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப் புலனாய்வுபிரிவின் அதிகாரியும் மன்றில் தோன்றியிருந்தார்.இந்நிலையில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில்சட்டத்தரணி வி.ரி.சிவலிங்கம் ஆஜராகியிருந்தார்.
 
மன்றில் தோன்றிய குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரி இதுவரை நடைபெற்ற விசாரணைகள் தொடர்பிலான மேலதிக அறிக்கை ஒன்றினை மன்றிடம் சமர்ப்பித்திருந்தார்.
 
அத்துடன் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும், அதற்கான அனுமதியினை மன்று வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
 
குற்றப் புலனாய்வு பிரிவினரின் சமர்ப்பணத்தினை ஏற்ற நீதவான் மேலதிக விசாரணைகளை நடத்துவதற்கான அனுமதியினை வழங்கியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மன்றில் தோன்றிய சட்டத்தரணி வி.ரி.சிவலிங்கம், குறித்த வழக்குத் தொடர்பான விசாரணைகளை யாழ். நீதிமன்றம் நடத்தி வருகின்ற நிலையில், முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கர் குறித்த வழக்கில் தலையீடு செய்யும் வகையில், உயிரிழந்த மாணவர்களுடைய பெற்றோரை அழைத்து பேசியுள்ளார்.
 
குறித்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் நடந்துள்ள நிலையிலும்,முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இவ் வழக்கில் தலையீடு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டமை ஏன்? என்று இதுவரை தெரியப்படுத்தப்படவில்லை.
 
குறித்த பொலிஸ் அதிகாரியின் இந் நடவடிக்கை தொடர்பான உரிய பதில் மன்றில் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த நீதவான் இது தொடர்பான உயர் பொலிஸ் அதிகாரிகளிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களினால் குறித்த சம்பவம் தொடர்பான விளக்கம் மன்றுக்கு வழங்கப்படும் என்றார்.
அத்துடன் சந்தேக நபர்கள் 5 பேரையும் எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி வரைக்கும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

0 Kommentare:

Kommentar veröffentlichen