கோத்தபாய தலைமையில் மரணப்படை..!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தலைமையில் மரணப்படை ஒன்று செயற்பட்டு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குற்றப்புலனாய்வு பிரிவினர் கல்கிசை நீதிமன்றில் நேற்றைய தினம் வெளியிட்ட கருத்துக்களை அடிப்படையாக கொண்டு சர்வதேச ஊடகங்கள் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, கோத்தபாய ராஜபக்ச தலைமையின் கீழ் செயற்பட்ட இரகசிய மரணப்படை குழுவினரே ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்திருப்பதாகவும், இதற்கான சான்றுகள் கிடைத்திருப்பதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து செயற்பட்ட இந்தப் படை பிரிவு, இராணுவ கட்டளை அமைப்புக்கு வெளியே செயற்பட்டுள்ளதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கோத்தபாய ராஜபக்ச தேசிய புலனாய்வு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண ஊடாக இரகசிய சிறப்பு படை பிரிவு ஒன்றை இயக்கியதாக முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சாட்சியம் வழங்கியுள்ளார்.

குறித்த இரகசிய பிரிவானது தனது அதிகாரத்துக்கு அப்பால் செயற்பட்டுள்ளதாக சரத் பொன்சேகா சாட்சியம் வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது குறித்த விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் எனவும், சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 Kommentare:

Kommentar veröffentlichen