பள்ளிக்குப் போன பிள்ளை ஏன் வரவில்லை? – புதுவை இரத்தினதுரை

பள்ளிக்குப் போன பிள்ளை ஏன் வரவில்லை?

இளந்தளிரே!
நீ எங்கே?
எருக்கும்பம் போன்ற
சதைக் கும்பத்துக்குள்ளே
உன்னை எப்படித் தேடுவேன்?
கையெது
காலெது
மெய்யெது என்று
இனம் காண முடியாத
இறைச்சிக் குவியலுக்குள்ளே
இதுதான் என்மகள் என்று
உன்னை எப்படி இனம் காணுவேன்?
இளந்தளிரே!
நீ எங்கே?
அன்றும் வழமை போல் தான்
விடிந்தது.
எழுவான் திசையில் கதிரோன் எழுந்தான்
அதுபோல நீயும் அழகாய் எழுந்தாய்!
“அம்மா இன்று பரீட்சை” என்றாய்;
படித்தாய்
குளித்தாய்
சாப்பிட்டாய்
அறைக்குள்ளே சென்றாய்.
வெள்ளைப் புறாபோல் வெளியே வந்தாய்
துள்ளிக்கொண்டு சைக்கிளில் ஏறி
சென்றாய்.
வருவேன் என்று சொல்லிப் போனாய்
ஏனம்மா வரவில்லை?
இளந்தளிரே?
உன்னை எப்படித் தேடுவேன்.
ஐந்தாம் வகுப்பு “ஸ்கொலசிப்பில்”
அதிகம் புள்ளிகள் பெற்றவள்
ஆனநீ
எப்படித் தெருவில் இப்படிப் போனாய்!
“உத்தம சனாதிபதி”
உனக்களித்த சீருடையைத்தானே
அணிந்து சென்றாய்.
“மேன்மை தங்கிய பெரியவர்” தந்த
பாநூல்களைத்தானே சுமந்து சென்றாய்
இருந்தும் நீயேன் இப்படி ஆனாய்?
“இராச வீதியில்….”
என் இளவரசிக்கு என்ன நடந்தது?
‘சிவப்பு பாதுகாப்பு நிதியத்துக்கு”
அருகில்
உன்னை ஏன் இப்படிப் பிச்செறிந்தார்கள்.
‘சுப்ப சொனிக்” அடித்த தென்றார்கள்
உன்மீதுதான் குண்டுகள் வீழ்ந்ததென்று
அப்பனிவன் எப்படி நம்புவேன்.
பள்ளிப் பிள்ளைகள் செத்ததென்றார்கள்
அவர்களில் நீயும் ஒருத்தியென்று
எப்படி நான் நினைப்பேன்’
“உத்தமர்” தந்த “வெள்ளைச் சீருடை”
“இலவசமான பாடப் புத்தகம்”
உன்னிடம் இருந்த போதும்
அவர்கள்
எப்படி உன்மேல் குண்டுகள் வீசலாம்?
“இயந்திரக் கழுகில்” ஏறிவந்து
இங்கே குண்டுகள் வீசும் “அவனுக்கு”
என்தன் துயரம் எப்படிப் புரியும்?
கொழும்பில் இருந்து
அவனை ஏவி
குண்டை வீசெனச் சொல்லும் தளபதி
நாங்கள் துடிப்பதை எப்படி அறிவான்!
“ஞானமுருகன் கோயில் மண்டபம்”
“தேங்காய் சண்முகம் வீடும்”
வீதியும்
புலிகள் இருக்கும் குகையா?
இல்லையே!
அப்படியாயின் இவைகளின்மீது
எப்படிக் குண்டுகள் எறிந்திடமுடியும்?
தமிழனுக்குப் பிறந்த தளிரே?
தமிழிச்சி என்பதற்காகவே
நீ சிதைக்கப் பட்டாய்.
தமிழர் நிலத்தில் வளர்ந்ததுக்காக
பனைமரங்கள் கூடப் படுகாயம் அடைகின்றன
மாடிவீடுகள் மரணிக்கின்றன.
சின்னக் குடிசைகள் கூடத் தீக்குளிக்கின்றன.
என்மகளை மட்டும் எப்படி விடுவார்கள்?
ஆம்
என் உதிரப் பூவே!
தமிழிச்சி என்பதற்காகவே
நீ சிதைக்கப்பட்டாய்
சங்காரமான “வை-8” போல
சுப்ப சொனிக்கும் தீப்பிடித்தெரியும்
என்றோ ஒருநாள்
எங்கள் பிள்ளைகள்
இந்தக் கழுகையும் சுட்டு வீழ்த்துவர்
அன்று நான்
இராசவீதியில் நிமிர்ந்து நின்று
ஆடிப்பாடி அகமகிழ்ந்திடுவேன்!

    புதுவை இரத்தினதுரை

    விடுதலைப் புலிகள்
    ஆடி 1993

0 Kommentare:

Kommentar veröffentlichen