வெளிநாட்டு நீதிபதிகளை வலியுறுத்தினார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சமர்ப்பித்த அறிக்கை மீது தற்போது விவாதம் இடம்பெற்று வருகிறது. சிறிலங்கா நேரப்படி இரவு 7.40 மணியளவில் இந்த விவாதம் ஆரம்பித்தது.



இதில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், 30/1 தீர்மானத்தின் மூலம் வழங்கப்பட்ட ஆணைக்கு அமைய, அதன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றிய தமது அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றினார்.
இதன் போது, அவர் வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்குத் தொடுனர்களை உள்ளடக்கிய விசாரணைப் பொறிமுறையை அமைக்க வேண்டும் என்றும், அனைத்துலக பங்களிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அத்துடன், பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம், காணிகள் விடுவிப்பு, பாதுகாப்புப் படையினர் தண்டனையில் இருந்து தப்பிக்கும் கலாசாரம் முடிவுக்கு கொண்டு வரப்படல் உள்ளிட்ட விடயங்கள் இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையடுத்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மீதான விவாதம் இடம் பெற்று வருகிறது,

சிறிலங்கா பதிலளிப்பதற்கு காலஅவகாசம் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, செக் குடியரசு, ஜேர்மனி, மொன்ரனிக்ரோ, டென்மார்க், பிரான்ஸ், சுவிஸ், ஜப்பான், அவுஸ்ரேலியா, பிரித்தானியா, சீனா, பாகிஸ்தான், நியூசிலாந்து, அமெரிக்கா, எஸ்தோனியா, சூடான், மசிடோனியா, நோர்வே, அயர்லாந்து, ஸ்பெய்ன், பெல்ஜியம், நெதர்லாந்து, ரஷ்யா, கானா, மாலைதீவு, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் உரையாற்றின.

இதையடுத்து தற்போது, மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் உரையாற்ற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக கஜேந்திர குமார் பொன்னம்பலம், நிமல்கா பெர்னான்டோ, ஆகியோர் உரையாற்றினர். இதையடுத்து அன்புமணி இராமதாஸ், பாக்கியசோதி சரவணமுத்து உள்ளிட்டவர்கள் உரையாற்றினர்.

இதன் பின்னர், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் பதில் உரை நிகழ்த்தினார். இதையடுத்து, சிறிலங்கா நேரப்படி, இரவு 9.13 மணியளவில் இந்த விவாதம் முடிவுக்கு வந்துள்ளது.

0 Kommentare:

Kommentar veröffentlichen