குறைகேள் அலுவலகத்தை யாழில் திறந்து மக்கள் குறையை நேரில் அறியாது நழுவிய ஜனாதிபதி


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் வேலையற்ற பட்டதாரிகளை சந்திப்பதாக கூறி அழைத்துவிட்டு அவர்களை சந்திக்காமல் ஏமாற்றிவிட்டு யாழிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நழுவிச் சென்றுள்ளார்.

ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் என்ற குறைகேள் அலுவலகத்தினை திறந்து வைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்.
இந்த நிலையில் காணாமல்போனோர் தொடர்பில் பொறுப்புக் கூறலை வலியுறுத்தியும் ஜனாதிபதியை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் அரச நியமனங்களை வழங்கக்கோரி பெருமளவு பட்டதாரிகளும் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
ஆரம்பத்தில் இருந்தே போராட்டம் நடைபெற்ற இடத்தில் பெருமள விலான கலகம் அடக்கும் பொலி ஸாரும் அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த பாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி காணாமல்போனோரின் உறவுகள் மற்றும் பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது போராட்டம் பேரணியாக மாற்றமடைந்து உறவுகள் அனைவரும் ஜனாதிபதியின் நிகழ்வு நடைபெற்ற ஆளுநர் அலுவலகத்திற்குள் செல்லும் வாயில் முன்பாக ஒன்றுகூடி தம்மை  ஜனாதிபதியை சந்திக்க அனுமதிக்குமாறு கோரப்பட்டது.
இதன்போது வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருடன் சிங்களத்தில் கதைத்து உறவுகளை உள்ளே அனுமதிக்குமாறு கோரினார்.
எனினும் தம்மால் அந்த அனுமதியை வழங்க முடியாது என கூறி பிரதான வாசலுக்கு சென்று அனுமதியை கோருமாறு பணித்தனர். இதன்போது குறித்த வாயிலில் ஆயுதம் தாங்கிய விசேட அதிரடிப்படையினர் வழிமறித்து நின்றனர். இதன் பின்னர் ஆளுநர் அலுவலகத்தின் பிரதான வாயிலுக்கு சென்று உள்ளே அனுமதிக்குமாறு அனுமதிகோரப்பட்டது.
எனினும் உள்ளே செல்வதற்கு யாருக்கும் அனுமதியில்லை என வாயிலில் நின்ற ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் மீண்டும் கூறப்பட்டது. இதன்போது உறவுகளை பறிகொடுத்தவர்கள் அங்கு நின்று உரக்க குரலெழுப்பினர். வெளியில் வெயிலில் கதறி கொண்டுள்ளோம். ஜனாதிபதி உள்ளே நடனம் பார்த்து ரசிக்கின்றார். போர்க்குற்றவாளியே வெளியே வாருங்கள் என வாசலில் நின்று கொண்டு உறவுகளால் கோசங்கள் முன் வைக்கப்பட்டது.
இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் போராட்டத்தில் தம்மை இணைந்திருந்தது. அதேவேளை ஜனாதிபதியின் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு நேர் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் உயர் அதிகாரிகள் காணாமல்போனோர் சார்பிலும் பட்டதாரிகள் சார்பிலும் தலா  மூவரை உள்ளே அனுமதிக்குமாறு கூறினார்கள்.
எனினும் அதற்கு மறுப்பு தெரிவித்து, ஐந்து பேரினை அனுமதிக்குமாறு கோரப்பட்டது. அல்லது நாங்கள் தொடர்ந்து போராடுகின்றோம் என கூறப்பட்டது. இதனை அடுத்து ஐந்து பேரினை உள்ளே அனும திப்பதற்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு இணங்கியது.
இதனை அடுத்து வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவையின் தலைவர் நிசாந்தன் உள்ளிட்ட ஐந்து பேர் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாகவும் பட்டதாரிகள் சார்பாக  உள்ளே சென்றனர்.
இதனை அடுத்து வெளியே போராடிக்கொண்டிருந்தவர்கள் அமைதியடைந்து, உள்ளே சென்றவர்களின் வருகைக்காக காத்திருந்தனர். எனினும் உள்ளே சென்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஜனாதிபதி தம்மை சந்திக்க வருவார் என்று காத்திருக்க, பிரதான வாயில் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திப்பதை தவிர்த்து கொண்டு விசேட அதிரடிப் படையின் பாதுகாப்புடன் போராட்டம் நடைபெறும் இடத்தை பிறிதொரு வாயினூடாக ஜனாதிபதி கடந்து சென்றார்.
இதனால் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பட்டதாரிகள் ஆகியோர் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன் ஆகியோரின் முன் நகர்வின் தலைமையில் ஏ9 வீதியை வழிமறித்து போராடியிருந்தனர்.
இதன்போது பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் கடும் இழுபறி நடைபெற்றதோடு, மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கமும் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட் சகருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
இதனால் அங்கு சில மணி நேரம் பதற்ற நிலைமையும் நீடித்திருந்தது.

0 Kommentare:

Kommentar veröffentlichen