மறக்கத்தகுமோ...? 13.03.2017

"லெப் கேணல் ஜொனி " இந்த பெயரை அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள் அதுவும் அமைதிப்படை என்று வந்து தமிழீழத்தில் இனவழிப்பு செய்த இந்திய வல்லாதிக்ப்படை அறியாமல் இருக்க முடியாது. அறிந்திருந்தாலும் இன்றும் மறந்திருக்க முடியாது.
மணலாறுக் காட்டுக்குள் காலைப் பதிக்கும் இடமெல்லாம் பாதங்கள் இல்லாமல் போன போது, "பவான்" என்று அணி அணியாய் வந்த இந்தியப்படை திகிலடைந்து நின்ற போது மண்ணுக்குள் புதைந்து கிடந்து இந்தியத்தின் துரோகத்துக்கு பதிலுரைத்துக் கொண்டிருந்தான் ஜொனி.
யார் இந்த ஜொனி? இவருக்கும் இந்தியத்தின் துரோகத்துக்கும் என்ன தொடர்பு? இந்த வினாக்களுக்கான விடைகளை இந்த பத்தியூடாக தேடுவோம்.
மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்களாலும் தமிழீழ தேசியத் தலைவராலும் மிகவும் நேசிக்கப்பட்ட மூத்த போராளியே ஜொனி. தனது பட்டப்படிப்பை தூக்கி எறிந்து விட்டு தேசக்களம் புகுந்த உயரியவன். இயக்கத்தில் இணைந்த நாள்முதல் கிட்டண்ணையால் புடமிடப்பட்ட போராளி. இறுதிவரை தேசத்தை நேசித்த வீரமகன்.
இப்படியான வேங்கையை இந்தியம் தனது ஆயுதப்பயிற்சி என்ற பெயரில் இந்தியாவிற்குள் அரவணைத்துக் கொண்டது. தர அளவீட்டு ஒப்பீட்டில் மிக தாழ்நிலை பயிற்சிகளை வழங்கி எம்மையும் மற்ற அமைப்புக்களை போல தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைத்த இந்தியத்தின் கபட நோக்கத்தை அறிந்திருந்த எம்மவர்கள் தரப்பட்ட அந்த தரமற்ற ஆயுதப்பயிற்சியில் பெற்ற அனுபவங்களோடு துரோகத்தனம் செய்த இந்தியப்படைகளின் கீழ்த்தரமான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளியிட முடிவெடுத்தனர்.
"அமைதிப்படை"என்ற பெயரில் தமிழீழத்துக்கு தன் இராணுவத்தை அனுப்பிய ராஜீவ்காந்தியின் செயற்பாடு விடுதலைப்புலிகளை இந்தியத்துக்கு எதிராண சண்டைக்கு நாள்குறிக்க வைத்தது. புலிகள் போராடினர். புற்றீசல்களாய் தாயகம் முழுக்க பரவிக் கிடந்த இந்தியத்தை பலியாக்கி கிலி கொள்ள வைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில் தான், கேணல் கிட்டு, லெப் கேணல் ஜொனி உட்பட்ட போராளிகளை வைத்து தேசியத்தலைவர் தங்கி இருக்கும் இருப்பிடத்தை இனங்காணத் திட்டமிட்டது இந்திய புலனாய்வு அமைப்பான ரோ மற்றும் இந்திய இராணுவம். அதன் முதல் திட்டமாக வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருந்த போராளிகளுக்கான வெளித்தொடர்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன திட்டமிட்ட புனைகதைகள் கூறப்பட்டன. இதனை நம்பும் அவர்கள் எப்படியாவது எமது போராட்டத்தை காக்க வேண்டும் என்பதற்காக எதாவது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைப்போலவே எம்மவர்களும் சண்டை நிறுத்தம் ஒன்றை வேண்டினர் அதனூடாக தலைவரை சந்தித்து பேசுவதற்கும் பேச்சுவார்த்தைகளுக்கான அனுமதி கோரலுக்கும் ஏற்பாடு செய்ய இந்திய அரசை கோரினர். அவர்களோ விருப்பமற்றவர்களை போல நடித்து ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட வழியே நடந்ததனர். நீண்ட கருத்து முரண்களுக்கு பிறகு அனுமதித்தனர்.
அனுமதி கிடைத்த பின் தாயகத்துக்கு தலைவரை சந்திக்க கிட்டு அவர்களால் அனுப்பப்பட்டார் மூத்த போராளி ஜொனி. பல இடர்கள், கண்காணிப்புக்கள், தொடர்ந்து கொண்டிருந்த புலனாய்வாளர்கள், காட்டிக் கொடுப்பாளர்கள் என்று பல்வேறுபட்ட பிரச்சனைகளைத் தாண்டி அத்தனை விழிகளுக்குள்ளும் இருட்டைக் காண்பித்துவிட்டு தலைவரை சந்தித்தார் ஜொனி. பிரச்சனைகளை ஆராய்ந்தார் நிலமைகளை அறிந்து கொண்டார். அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிவுறுத்தல்களை பெற்றுக்கொண்டு மீண்டும் இந்தியாவுக்குத் திரும்ப காட்டை விட்டு வெளியில் வந்தார். ஆனால் தம்மை ஏமாற்றிவிட்டு தலைவரை சந்தித்து திரும்பிய ஜொனிமீது பயங்கர கோவத்தில் இருந்தது ரோ.
இத்தனை ஏற்பாடுகளையும் மீறி எவ்வாறு இதை சாதிச்சார் என்ற கோவத்தில் புதுக்குடியிருப்பின் தேவிபுரம் பகுதிக்குள் வைத்து நிராயுதபாணியாக வந்துகொண்டிருந்த ஜொனி மீது தாக்குதல் செய்தது இந்திய இராணுவம். எந்த தேசத்தை விரும்பினானோ எந்த மக்களுக்காக தன்னை அர்ப்பணிக்க துணிந்தானோ அந்த மண்ணில் தன் உயிலை விலையாக்கினார் ஜொனி.
இந்த துரோகத்தனத்தின் மூலம் தம்மை யார் என்று உலகிற்கு முத்திரையிட்ட இந்தியத்தை கதிகலங்க வைத்த போராளிகளை அழைத்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆராய்ந்த போதே மணலாறு காடெங்கும் பல நூறு இராணுவத்தின் பாதங்களை தின்னும் கண்ணிவெடிகளாக லெப் கேணல் ஜொனி மண்ணுக்குள் புதைந்திருந்து கதை சொல்லிக் கொண்டிருந்தான்....

0 Kommentare:

Kommentar veröffentlichen