அரசியல் தீர்வைப் பொறுத்தமட்டில் வடகிழக்கு இணைப்பு என்பது உடனடிச்
சாத்தியம் இல்லை என்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இலங்கை அரசுக்கு
கால அவகாசம் வழங்கப்படுவதை நியாயப்ப டுத்தியும் தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன்
தெரிவித்திருக்கும் கருத்துக்களை நாம் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம் என
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது.
மேற்படி விடயம் தொடர்பில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர்
நாயகமும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ந.ஸ்ரீகாந்தாவினால் நேற்றைய தினம்
ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிக்கை வருமாறு,
இலங்கையின் இனப் பிரச்சினைக்கு அரசியற் தீர்வு காணும் விடயத்தைப்
பொறுத்த மட்டில், வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைந்த தமிழ்மொழி வழி
மாநிலத்துக்கு பூரண அதிகாரங்களுடன் கூடிய சுயாட்சி வேண்டும் என்பது தான்
தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கோரிக்கையாகும்.
இந்த அடிப்படை நிலைப்பாட்டில் அரசியல் சமரசத்திற்கோ அல்லது
சந்தர்ப்பவாத விட்டுக் கொடுப்பிற்கோ இடமில்லை. இந்த நிலைப்பாடு தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பினால் கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும், அதற்கு முன்பு
நிகழ்ந்த கிழக்கு மற்றும் வடக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலில்களிலும் தமிழ்
மக்களிடம் முன் வைக்கப்பட்டு அவர்களின் மகத்தான ஆணை
பெறப்பட்டிருக்கின்றது.
ஆயினும், இரண்டு பெரும் சிங்கள பேரி னவாத கட்சிகளையும்
உள்ளடக்கியிருக்கும் இன்றைய ஸ்ரீலங்கா அரசாங்கம், இலங்கைத் தீவு ஒரே நாடு
என்ற வரையறைக்குள், ஒற்றையாட்சி முறையினை அகற்றி, தமிழ் மக்களுக்கு
அவர்களின் மரபுவழித் தாயகத்தில் சுயாட்சியை வழங்குவதற்கு தயாராக இல்லை.
அதுமட்டுமன்றி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றத்தின் போர்க்குற்ற
விசாரணை தொடர்பிலான தீர்மானத்தின் பிரகாரம், வெளிநாட்டு நீதிபதிகளின்
பங்களிப்பையும் கொண்ட கலப்புப் பொறிமுறையிலான போர்க்குற்ற நீதி விசாரணையை,
ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரசாங்க மும் திட்டவட்டமாக நிராகரித்து
நிற்கின்றனர்.
ஆனால், அதேநேரத்தில், போர்க்குற்ற விசாரணைக்காக அரசாங்கத்தினால்
கோரப்படும் இரண்டு வருட கால அவகாசத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
பெயரில், அதன் தலைவர் சம்பந்தனும் பேச்சாளர் சுமந்திரனும் ஆதரித்து நிற்பது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய மூன்று கட்சிகளின்
நிலைப்பாட்டிற்கு முற்றிலும் எதிரானது.
அதுமட்டுமன்றி, போர்க்குற்ற விசாரணைக்கு கோரப்படும் இரண்டுவருட கால
அவகாசத்தை ஆட்சேபித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றத்திற்கு மகஜர்
ஒன்றை சமர்ப்பித்திருக்கும் கூட்டமைப்பின் சக பாரா ளுமன்ற உறுப்பினர்கள் 11
பேரின் அரசியல் விவேகத்தை கேலி செய்யும் விதத்திலும் கூட்டமைப்பின்
பேச்சாளர் சுமந்திரனால் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு
கூட்டத்தைக் கூட்டி முடிவு எதுவும் எடுக்காமல் கூட்டமைப்பின் பெயரில் மிக
பாரதூரமான ஒரு நிலைப்பாடு முன்வைக்கப்பட்டிருப்பது, கூட்டமைப்பின்
எதிர்காலத்தையே கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்றது.
அத்துடன், பாதிக்கப்பட்ட நிலையில் நீதி கோரி நிற்கும் வழக்காளி
ஒருவர், குற்றம் சாட்டப்பட்டிருக்கும் எதிரிக்கு ஆதரவாக பேசுவதைப்போல,
போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இலங்கை அரசுக்கு ஆதரவாக மறைமுகமான முறையில்
வாதங்கள் முன் வைக்கப்பட்டிருப்பதும்,
அதேநேரத்தில் வட கிழக்கு இணைப்பு தொடர்பில் எதிர்மறையான ஒரு அரசியல்
கருத்துருவாக்கத்தை தமிழ் மக்கள் மத்தியில் கொண்டுவரும் தோரணை யில்
பரப்புரைகள் மேற்கொள்ளப்படுவதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற
பெயரில் இப்பொழுது என்னதான் நடந்துகொண்டு இருக்கின்றது என்ற கேள்விக்கு
வழியமைத்திருக்கின்றது.
யுத்தத்தின் கோர வடுக்களைச் சுமந்து நிற்கும் நிலையிலும் துவண்டுபோய்
விடாமல், அரசியல் நீதியை தொடர்ந்து கோரி நிற்கும் தமிழ் மக்களின் சார்பில்
செயற்பட்டு வந்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசியல்
பேரத்திற்கும், சந்தர்ப்பவாத, திரைமறைவு உடன்பாடுகளுக்கும் பலியாகத்
தொடங்கியுள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது.
ஒற்றுமையின் பெயரில், பல்வேறு கரு த்து வேறுபாடுகளுக்கு நடுவிலும் எமது கட்சி பெரும்பாலும் மௌனம் காத்து வந்திருக்கின்றது.
தவிர்க்கப்படமுடியாத ஒரு சில சந்தர்ப்ப ங்களில் மாத்திரம்தான் எமது
எதிர்க் கருத்துக்களை நாம் வெளியிட்டிருக்கிறோம். அந்த வகையில் மூன்று
வாரங்களுக்கு முன்னர் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் எமது கட்சியின்
நிலைப்பாடு திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும், கூட்டமைப்பின் மூன்று கட்சிகளின் கருத்துக்களைப்
புறக்கணித்து, தன்னிச்சையாகவும் சர்வாதிகாரத் தோரணை யிலும் தமிழரசுக் கட்சி
கூட்டமைப்பின் பெயரில் தொடர்ந்து செயற்படப் போகின்றது என்றால், அதனை
கூட்டமைப்பின் எதிர்கால நலன் கருதி, ஒரு அரசியல் சவாலாக எமது கட்சி
ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.
கூட்டமைப்பு என்பது அதில் அங்கம் வகிக்கும் எந்தவொரு கட்சியினதும்
தனிச்சொத்து அல்ல. தமிழ் மக்கள் அளித்த ஆணைக்கு அமைவாக எந்தவொரு கட்சியோ
அல்லது அரசியல் பிரமுகரோ கூட்டமைப்பின் கொடியின் கீழ் செயற்பட முடியவில்லை
என்றால், அவர்களுக்கான உரிய வழிக்காக கூட்டமைப்பின் கதவுகள் திறந்தே
வைக்கப்பட்டுள்ளன என்பதனை அழுத்தம் திருத்தமாக எமது கட்சி சொல்லி வைக்க
விரும்புகின்றது.
தமிழரசுக் கட்சியின் தலைவராகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மாவை
சேனாதிராஜா, கூட்டமைப்பின் பெயரை உபயோகித்து தமிழரசுக் கட்சிக்குள் இருந்து
முன்னெடுக்கப்படும் தமிழ்த் தேசிய விரோத நடவடி க்கைகளை இனிமேலும்
அனுமதித்துக் கொண்டிருக்க கூடாது என்பதையும் எமது கட்சி தெரிவித்துக்
கொள்கின்றது என ரெலோவின் செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தா விடுத்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Kommentare:
Kommentar veröffentlichen