மறக்கத்தகுமோ..... 16.03.2017



அந்த கடற்கரை மிக அழகானது. பல்லாண்டுகளாக குறிப்பிடப்பட்ட மனிதர்களின் பாதங்களை மட்டும் சுமந்து நின்ற பெருமைக்குரியது. அவர்கள் அந்த மண்ணை மிகவும் அதிகமாக நேசித்தார்கள். அதனாலோ என்னவோ அந்த கடற்கரைக்கும் அவர்களுக்குமிடையே பல நாட்கள் காதலுடனான பல்லாயிரம் கதைகள் மணலில் புதைந்து கிடந்தது. கடலில் காவியம் படைத்த அவர்களுக்கு தேவையானவற்றை எல்லாம் அங்குதான் அவர்கள் உருவாக்கி கொண்டார்கள். அது அவர்களின் தனித்துவமான பகுதி ஆனால் சிலகாலங்களாக எல்லாமே தலைகீழாக மாறி இருந்தது. யாரும் செல்லல்லாம் வாழலாம்...அவர்களை நினைக்கும் போதெல்லாம் அந்த மணல் பிரதேசம் சிவந்துவிடும். அத்தகைய அந்த கடலின் கரையில் தான் நாங்கள் அன்று படுத்திருந்தோம்.

இறுதி சண்டை என்று இனவழிப்பின் உச்சத்தை சிங்களம் எம்மீது திணித்துக் கொண்டிருந்த அந்த கொடுமையான நாட்களில் ஒருநாள் அது. இரட்டைவாய்க்கால் பகுதிக்கு பச்சைப்புல்மோட்டைப் பகுதியில் இருந்து காயப்பட்ட போராளிகள் நகர்த்தப்பட்டிருந்தார்கள். மணல் மேடுகளுக்குள் இருந்த பள்ளங்களை ஆழமாக்கி அவற்றுக்கு மேலே தறப்பாள் அடித்துவிட்டு பதுங்ககழி என்ற பெயரில் அவர்களை படுக்க வைத்தோம். அந்த பிரதேசம் முழுவதும் மணல் என்பதால் பதுங்ககழிகளை கூட அமைப்பதில் சிரமப்பட்டோம். காயமடைந்த போராளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியவில்லை. இதே போலவே மக்களும் அந்தரித்து கொண்டிருந்தார்கள். எதையுமே செய்ய முடியாத கையறுநிலை.

இரண்டு, மூன்று நாட்களுக்கு மேலாக தூக்கமின்மை பசி போன்றவற்றால் மிகவும் களைத்து போயிருந்தோம். ஒரு ஒற்றை பற்றைக்குள் மணலை வாரி போட்டுவிட்டு உடலை மறைக்கிற அளவுக்கு கிடங்காக்கிவிட்டு அதற்குள் படுத்திருந்தோம். அது ஒரு இரவு மங்கும் மாலைப் பொழுது. திடீர் என்று ஒரு சத்தம் திடுக்கிட்டு எழுந்த போது எந்த அரவமும் இல்லை. ஆனால் அந்த பிரதேசமே துடைத்தழிக்கப்படவிருந்ததற்க்கான ஆரம்பம் என்பதை நாம் இனங்காண தவறிவிட்டோம். மீண்டும் கண்கள் மூடிக்கொண்டன.
சிறிது நேரம் கழித்து கனோன், ஆடலறி, ஆர்.பீ.ஜீ, பல்குழல் எறிகணைகள், PK, AKlMG, என பலவகை ஆயுதங்களின் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலாக அந்த பிரதேசம் முழுமையும் துடைக்கப்படுகிறது. எழுந்து என்ன நடக்கிறது என்று பார்க்க முடியவில்லை. தலையை தூக்கினால் மேற்சொன்ன ஏதோ ஒரு வெடிபொருள் எம்மை சாகடிக்கும் நிலை. ஆமை தன் தலையை ஓட்டுக்குள் இழுப்பதை போன்று அந்த வெற்றுத்தரையில் உடலளவு கிளறி எடுக்கப்பட்ட மணல் கிடங்குக்குள் கிடந்தோம். எங்கும் அழுகுரல்கள். வேதனையால் எழுந்த அவலக்குரல்கள். காப்பாற்ற கேட்கும் அழைப்புக்கள். திடீர் என்று ஒரு கனொன் 23 செல் வந்து அருகில் இருந்த மரத்தில் பட்டு சிதற, ஐயோ அம்மா என்னை காப்பாத்துங்கோ, யாராவது வாங்கோ என்று அருகில் கேட்ட குரல் ஒன்று அடங்கி விட்டிருந்தது. யாரும் யாருக்கும் உதவ முடியாத நிலை. உதவ சென்றால் உயிருக்கு உத்தரவாதமில்லை என்ற நிலை. ஆனால் இப்படியே படுத்திருந்தால் கொஞ்ச நேரத்துக்கு முன் அடங்கிப்போன அந்த இளம் பெண்ணின் குரலைப்போல இன்னும் பல நூறு குரல்கள் அடங்கி போகும். மனதில் எண்ணம் எழ எதாவது செய்ய வேண்டும் என்று எழுகிறேன். ஆனால் முடியவில்லை தலைக்கு மேலால் சீறும் ரவைகள் என்னைக் கட்டுப்படுத்துகிறது. அருகில் படுத்திருந்தவன் "படுடா பேசாமல்" என்று திட்டுகிறான் நான் எழும்பவில்லை. அப்போது...
"ஐயோ தம்பிய... காணல்ல என் பிள்ளைய காணல்ல எங்க போனவன ஐயோ என் பிள்ளை, என் பிள்ளை " ஒரு இளம் தாய் குளறுகின்ற வேதனைக் குரல் எழுகிறது. ஒன்றரை வயது பாலகன் அந்த மணல் வெளியில் ஏதோ செய்து கொண்டிருந்ததை கொஞ்ச நேரம் முன் கண்டது நினைவு வர சுற்றும் முற்றும் பார்க்கிறேன்.

கிட்டத்தட்ட 100 மீற்றருக்கு அப்பால் செய்வது தெரியாது அலறிக் கொண்டிருந்தது அந்த குழந்தை. எதையும் செய்ய முடியாது எங்கே போவது என்று புரியாது அழுது கொண்டிருந்த குழந்தையை நோக்கி ஒடுகிறேன். சுற்றி வர வீழ்ந்து கொண்டிருந்த எறிகணைகளோ, காற்றை கிழித்து செல்லும் ரவைகளோ எனக்கு அப்போது தெரியவில்லை. அருச்சுன் வில் பயிற்சி எடுத்த போது நடந்த சம்பவத்தை போல இலக்கு பார்த்த போது கிளியின் கண்கள் மட்டும் தெரிந்ததைப் போல எனக்கு அந்த குழந்தை மட்டுமே கண்ணுக்குள் நிறைந்திருந்தான்.

ஓடி சென்ற நான் அந்த குழந்தையை தூக்கிய போது எங்கோ வெடித்த எறிகணை துண்டொன்றால் அவனது கால் கிழிக்கப்பட்டிருந்ததையும் குருதி பெருக்கெடுப்பதையும் கண்டேன். குழந்தையை தூக்கிக் கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு நகர்ந்த போது. என்னையும் அந்த சின்னவனையும் இலக்கு வைத்து அடித்ததை போல PK ரவைகள் பாய்ந்து வந்தன. தப்பிக்கமுடியாது போலவே இருந்தது ஆனாலும் அருகில் இருந்த மண்மேட்டின் பின் மறைந்து கொண்டேன். மண்ணைத்துளைத்து தலைக்கு மேலாக ரவைகள் சென்றன. குழந்தையோ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தான். சாறத்தை கிழித்து காலுக்கு கட்டுகிறேன். அதற்குள் இருந்து எதையுமே செய்ய முடியாத நிலை. அவனை எப்படியாயினும் மருத்துவக் கொட்டிலுக்கு கொண்டு செல்ல வேண்டும். யாராவது ஒரு மருத்துவர் அவனுக்கு முதலுதவி செய்தால் அவன் தப்பித்து விடுவான் என்று எண்ணினேன். சிறு காத்திருப்புக்கு பின் மெதுவாக குனிந்து கொண்டு ஓடிச்சென்ற எனக்கு மருத்துவக் கொட்டில் ஒன்று முழுவதும் சிதைந்து கிடப்பதை கண்ட போது அதிர்ந்து போனேன். அதற்குள் படுத்திருந்த அத்தனை போராளிகளும் எங்கே...? விடை தெரியவில்லை கண்கள் மட்டும் கலங்குகிறன. நிட்சயமாக அவர்கள் இந்த மண்ணுக்காக காற்றோடு கலந்து மண்ணோடு மண்ணாகி விட்டார்கள் என்று புரிந்தது.

மீண்டும் அடியின் வேகம் அதிகரிக்க அந்த இடம் பாதுகாப்பற்றது என்று தெரிந்து வேறு இடம் மருத்தவக்கொட்டிலை நோக்கி நகர்ந்த போது சிறு நாட்களின் முன் சிங்கள வானூர்திகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் உருவாகி இருந்த பெரும் குழி ஒன்றினுள் பலரின் அழுகுரல் கேட்பதை உணர்ந்து அதற்குள் பார்த்தேன். அதிர்வின் உச்சத்துக்கு சென்றேன். அதற்குள் பாதுகாப்புத் தேடி ஓடிய பலர் இறந்தும் காயப்பட்டும் இருந்தார்கள். எதுவும் செய்ய முடியவில்லை, காயப்பட்டவர்களை விட்டு செல்ல மனம் வரவில்லை ஆனாலும் துடித்துக் கொண்டிருந்த குழந்தையை காத்திட வேறு வழி தெரியாது அடுத்த மருத்துவ கொட்டிலை நோக்கி ஓடுகிறேன்.
அங்கே நின்ற மருத்துவ போராளி ஒருவனிடம் குழந்தையை கொடுத்துவிட்டு இன்னொரு போராளியையும் அழைத்துக் கொண்டு அந்த கிடங்கிற்கு சென்ற போது அடியும் குறைந்திருந்தது. அதனால் இருவருமாக அருகில் இருந்த அந்த குழியை சென்றடைந்து காயமடைந்தவர்களை காத்திடலாம் என்று ஓடினோம். ஆனால் அங்கே காயப்பட்ட சிலரை காணவில்லை சிலவேளைகளில் யாராவது காப்பாற்றி இருக்கலாம். இல்லை என்றால் தாமாகவே வேறு இடத்துக்கு ஓடியிருக்கலாம். இது ஒருபுறமிருக்க அதற்குள் இருந்த காயப்பட்டிருந்த ஒருவரை தவிர அனைவருமே இறந்து கிடந்த கொடூரம் அந்த குழியினுள் நடந்திருந்தது. எட்டுப்பேர் சாவடைந்திருந்தார்கள். காயப்பட்டிக்கிடந்தவரை தூக்கினோம் அவரோ வேதனையில் துடித்தார். வெறும் முதலுதவியை மட்டும் செய்து அவரை அவருடைய உறவு ஒருவரிடம் விட்டு சென்றோம்.

அந்த பிரதேசமே அழுகுரலால் நிரம்பியிருந்தது. எங்கும் வெடி நாற்றம். கந்தகம் சூழ்ந்திருந்த காற்று நாசியை தொட்டு சுவாசமானது. எதையும் செய்ய முடியாதவர்களாய் நானும் மற்றையவனும் அந்த குழந்தையை பார்க்க சென்றோம். அவன் பிளைத்திருந்தான் காலில் ஏறி இருந்த சிறு உலோகத்துண்டை மருத்துவர் அகற்றிவிட்டு மருந்தை கட்டி இருந்தார்.
அவனை தூக்கி அணைத்து கொண்டு அவனின் தாயிடம் நான் சென்ற போது அவள் கண்கள் சிவந்து கிடந்தன. பயத்தாலும் பிள்ளையை காணவில்லை என்றும் அழுதழுது களைத்துப் போயிருந்தாள். பிள்ளையைக் கண்டதும் துடித்தெழுந்து வாங்கிக்கொண்டாள். நாம் அவளிடம் இருந்து விடைபெற்ற போது, தம்பி எங்கட அப்பா... அவள் அழுகையுடன் தந்தையை பார்க்க, அவர் அருகில் போனோம் அவரின் உடல் உயிர் இருப்பதற்கான எந்த ஆதாரமுமற்று அடங்கிக் கிடந்தது.

0 Kommentare:

Kommentar veröffentlichen