இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் அநியாயமாக தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயக்குமாரின் தந்தை சண்முகலிங்கம் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
சண்முகலிங்கத்தின் இறுதிச்சடங்குகள் வரும் 20ம் தேதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கிறது. அதில் பங்கேற்க வசதியாக சிறை விடுப்பில் செல்ல ஜெயக்குமார் விரும்புவதாகவும், ஆனால், அவரது தந்தையின் இறுதிச் சடங்குகள் இலங்கையில் நடப்பதால் அவருக்கு சிறை விடுப்பு கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
ஜெயக்குமார் சிறையில் அடைக்கப்பட்டது முதல் இன்று வரை அவரும், அவரது தந்தையும் சந்தித்துக் கொண்டது இல்லை.
தந்தையின் கடைசிக் காலத்தில் அவருடன் இருக்க ஜெயக்குமார் விரும்பினார். ஆனால், அவரை விடுதலை செய்ய தமிழக அரசு மறுத்து விட்டதால் அவரால் கடைசி வரை தந்தையின் முகத்தைப் பார்க்க முடியவில்லை.
எனவே, குறைந்த பட்சம் தந்தையின் இறுதிச்சடங்கிலாவது பங்கேற்க வசதியாக அவரை சிறைவிடுப்பில் அனுப்ப வேண்டும்.
ஜெயக்குமார் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதோ, அவர் இலங்கைக்கு செல்ல வேண்டும் என்பதோ அவருக்கு சிறைவிடுப்பு வழங்க தடையாக இருக்கக்கூடாது.
கேரளம் அருகே இந்திய கடல்பகுதியில் இரு மீனவர்களை சுட்டுக் கொன்றதற்காக கைது செய்யப்பட்டு தில்லியில் ஆடம்பர மாளிகையில் சிறை வைக்கப்பட்டிருந்த இத்தாலிய கடற்படை வீரர்களை குடும்பத்தினருடன் பொழுதைக் கழிப்பதற்காக சிறை விடுப்பில் அனுப்பி வைத்த மத்திய, மாநில அரசுகள், தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக மகனை அனுப்ப மறுப்பது நீதியின் அடையாளமாக இருக்காது.
ராஜிவ் கொலை வழக்கில் தேவையின்றி தண்டிக்கப்பட்டு 26 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகியோரின் தந்தையர் அண்மைக்காலங்களில் இறந்துள்ளனர்.
அவர்களில் யாரும் கடைசிக்காலத்தில் தங்களின் பிள்ளைகளுடன் இருக்க முடியவில்லை என்பது தான் பெருஞ்சோகம்.
இந்த வழக்கில் அப்பாவி என்று விசாரணை அதிகாரி தியாகராஜனால் கூறப்பட்ட பேரறிவாளனின் தந்தை கடும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனும் தந்தையின் கடைசிக் காலத்தில் உடனிருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
26 ஆண்டுகளை கம்பிகளுக்கு நடுவே கழித்து விட்ட நிலையில் இனியாவது அவர்கள் குடும்பக் கடமைகளை நிறைவேற்ற வசதியாக ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 Kommentare:
Kommentar veröffentlichen