தமிழரசுக் கட்சியே ஆதரவு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்ல – சுரேஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் இலங்கைக்கு இரு வருட கால அவகாசத்தை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழரசுக் கட்சி மாத்திரமே அதற்கு ஆதரவு அளித்துள்ளது.
இலங்கையின் தலைவர்கள் யுத்த குற்ற விசாரணைகளை மறுத்து வரும் நிலையில், தமிழரசுக் கட்சி இலங்கைக்கு மேலும் இரு வருட கால அவகாசத்தை வழங்குவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர்  மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை கோரியுள்ளது. இந்த கால அவகாசத்தின் மூலம் இலங்கை அரசு என்னத்தை சாதிக்க போகின்றது என்று தெரியவில்லை.
நல்லிணக்கத்திற்கு பொறுப்பாக உள்ள சந்திரிகா யுத்த குற்ற விசாரணைகள் எவையும் தேவையில்லை என கூறியுள்ளார். யுத்த குற்ற விசாரணைகள் நடைபெற்றால் மாத்திரமே தமிழ் மக்கள் பாதுகாப்புடன் வாழ முடியும் என்று இருக்கும் நிலையில்,தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் இலங்கை அரசிற்கு கால நீடிப்பை வழங்கினால் ஐக்கிய நாடுகள் சபை மிக நெருக்கமாக இருந்து கண்காணிக்க வேண்டும் என கோரியுள்ளார்.
நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவ கார அமைச்சர், சந்திரிகா ஆகியோர் இலங்கை மீது யுத்த குற்ற விசாரணை தேவையில்லை என கூறிவரும் நிலையில், சம்பந்தன் கால நீடிப்பை அனுமதிக்க நினைப்பது வேடிக்கை யாக உள்ளது.
கால நீடிப்பு என்பது இலங்கை அரசினை பாதுகாக்கும் வழிமுறையாகவே இருக்கும். இரண்டு வருடங்கள் வழங்கினால் சர்வதேசம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை மறந்துவிடும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானமும் நீர்த்து போய்விடும், இந்த நிலையில் எவ்வாறு சம்பந்தன் கால நீடிப்பை வழங்க அனுமதிக்க முடியும்? இந்த கால நீடிப்பினை தமிழரசு கட்சி மறைமுகமான வகையில் ஏற்றுக்கொண்டு தான் உள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளான ரெலோ, புளொட், ஈ.பி. ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகள் இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்குவத ற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஆனால் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சம்பந்தன் ஆகியோரே இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதற்கு ஆதரவான கருத்துகளை கூறி வருகின்றனர்.
மாறாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதற்கு ஆதரவு வழங்கவில்லை. கூட்டமைப் பின் அங்கத்துவ கட்சிகளோடு கலந்துரையாடாத விடயங்களை சம்பந்தனும் சுமந்திரனும் தமிழரசு கட்சியின் முடிவாகவே அறிவிக்க வேண்டும். அரசின் முக்கியஸ்தர்கள் அனைவரும் தெளிவாக யுத்த குற்ற விசாரணை அவசியமற்றது என கூறியுள்ளனர். இதன் மூலம் கூட்டமைப்பின் கோரிக்கை யும் அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் இன்று வரை அரசோடு இணக்கமாக இருக்கின்ற சம்பந்தன் எதனை சாதித்தார் என்பது தெரியவில்லை. அரசினால் எமாற்றப்பட்டுள்ள சம்பந்தன் இராஜதந்திர ரீதியாகவும் தோற்கடிக்க ப்பட்டுள்ளார் என்பதே உண்மையாகும். எமது கட்சி இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதேவேளை,
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் இயற்றப்பட்ட தீர்மானத்தை ஐ.நாவின் பொதுச்சபைக்கு பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே எமது கோரிக்கை. கால நீடிப்பு என்பது அவசியமற்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

0 Kommentare:

Kommentar veröffentlichen