இதுதான் கிட்டு! இதுதான் சீலன்!! இதுதான் தமிழீழவிடுதலைப்புலிகள்-!!! ச.ச.முத்து

யாழ்மாவட்டத்தில் ஒரே நாளில் நான்கு இடங்களில் பேரினவாத கட்சியின் பொறுப்பாளர்களுக்கு! தண்டனை வழங்கும் நாள் அது.83ம்ஆண்டின் ஆரம்ப மாதம்.

பருத்தித்துறைக்கு கிட்டு சீலன் பொட்டு(அணித்தலைமை சீலன்),
வல்வெட்டித்துறைக்கு பண்டிதர் அணித்தலைவனாக சில போராளிகள் (பெயர் இப்போது தேவையில்லை),
நுணாவிலுக்கு தேசியதலைவர் அணித்தலைவராக அவருடன் புலேந்திரன், லாலா, மாத்தையா.!
யாழ்ப்பாணநகருக்கு செல்லக்கிளி அணித்தலைவராக அவருடன் பொன்னம்மாண், ஞானத்தான் ஆகியோர்…

அந்த நாளின் அதிகாலையிலேயே பருத்தித்துறைக்கும் வல்வெட்டித்துறைக்குமான அணிகள் வெளிக்கிடும்போது தலைவரின் கண்டிப்பான ஆனால் சிரிப்புடனான உத்தரவு.. மதியம் 12மணிக்கு பிறகுதான் நடவடிக்கை ஆரம்பிக்க வேணும். ஏனென்றால் தலைவரே சொல்கிறார் ‘ நானும் சிறீயும்(மாத்தையாவின் அப்போதைய இயக்க பேர்) புலேந்திரனும்,லாலாவும் இங்கை இருந்து நுணாவிலுக்கு சைக்கிள் உழக்க வேணும்.. அதுக்குள்ளே நீங்கள் அங்கை வெடியை போட்டால் இங்கு வீதிகள் எல்லாம் சோதிப்பாங்கள். ‘
போராளிகள் சிரித்தபடியே தலைவரின் உத்தரவை ஏற்றுக்கொண்டபடி பருத்தித்துறையை நோக்கி சைக்கிள் உழக்குகிறார்கள்.

யாழ்நகரில் இருந்து 30கிமீ தூரத்தில் இருந்த பருத்தித்துறை வல்வெட்டித்துறையை காலை நேரத்திலேயே வந்தடைந்தனர் அணிகள்.
அங்கிருந்து கிட்டு, சீலன், பொட்டு அணி பருத்தித்துறைக்கு போனது. பொட்டுவுக்கு இதுவே முதலாவது நேரடி நடவடிக்கை களம்.

தலைவரின் உத்தரவுப்படி மதியம் 12மணிக்கு பின்னரேயே நடவடிக்கை ஆரம்பிக்க உள்ளதால் மிகவும் நிதானமாகவும் ஆறுதலாகவுமே காத்திருத்தல் இருந்தது..
ஆனால் மதியம் 1மணியளவில் பருத்தித்துறையில் இருந்து கிட்டுவும் சீலனும் மட்டும் வேர்க்க விறுவிறுக்க சைக்கிளில் வல்வெட்டித்துறை பகுதியில் நாங்கள் தங்கி நின்ற இடத்துக்கு வந்தார்கள்.
சீலனின் கையில் ஒரு பெரிய பையுள் எஸ்எம்ஜி(SMG) கிட்டுவிடம் ஒரு .45கைத்துப்பாக்கி..அவர்களுடன் கையில் ஒரு சிறு கடதாசிபையுள் கை எறி குண்டுடன் போன பொட்டுவை காணவில்லை..

சீலனும் கிட்டுவும் மிகவும் பதட்டத்துடனும் அதனைவிட அதிகமான கவலையுடனும் வந்திருந்தனர்.
நிலைமையை சீலனே விளக்கினான்.

பருத்தித்துறையில் இவர்கள் எதிர்பார்த்து காத்துநின்ற அந்த சிங்களகட்சியின் பொறுப்பாளரான தமிழர் 12மணிக்கு சில நிமிடங்கள் கடந்துவிட்ட பொழுதிலேயே இவர்களின் தாக்கு எல்லையுள் வந்துவிட்டார்.
நேரமும் சந்தர்ப்பமும் ஒருங்கே வாய்த்துவிட்டது.
இடம் கொஞ்சம் பாதுகாப்பு குறைந்த இடம்தான். பருத்தித்துறை நீதிமன்றம் காவல்நிலையத்துக்கு அருகில்..

ஆனாலும் நெஞ்சம் நிறைந்த துணிவும் உறுதியும் கொண்டிருந்த சீலனும் கிட்டுவும் தாக்குதலை நடாத்தமுடிவு செய்கின்றனர்.
கிட்டுவின் துப்பாக்கியில் இருந்து சென்ற தோட்டா இலக்கின் உள்ளாக புகுந்து வெளி சென்று அந்த வழியால் வந்து கொண்டிருந்த ஒரு பொதுமகனின் முதுகில் புகுந்துவிட்டது.
அவரும் அதில் வீழ்ந்துவிட்டார். அன்று பருத்தித்துறை கோவிலில் தெப்பத்திருவிழா என்பதால் தெரு சோடணை நடந்துகொண்டிருந்தது. சம்பவ இடத்தில் இருந்து மிக அருகில் பருத்தித்துறை காவல்நிலையம் இருந்தது..
சென்ற விடயம் வெற்றியுடன் முடிந்தாலும்கூட பொதுமகன் ஒருவனும் காயமடைந்தது சீலனுக்கும் கிட்டுவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

சம்பவம் கேள்விப்பட்டு, வெடிச்சத்தம் கேட்டு அந்த இடத்துக்கு இன்னும் சில நொடிகளில் காவல்துறை வரும் என்பதை அறிந்திருந்தும்கூட சீலனும் கிட்டுவும் ஒரு முடிவு எடுக்கின்றனர். அதிகூடிய வலுவுடனான தோட்டாவால் தாக்கப்பட்டிருக்கும் பொதுமகனுக்கு ஆறுதல் கூறி அவரை மருத்துவமனைக்கு அனுப்பிய பிறகே அந்த இடத்தைவிட்டு நகர்வது என்று முடிவு எடுக்கின்றர்.
தவறுதலாக காயமடைந்த தமிழ்பொதுமகன் காயத்துடன் விழுந்து கிடக்கிறார்.சீலன் அவர் அருகில் சென்று மன்னிப்பு கேட்கிறான்.குனிந்து தனது மேல் சட்டையை கழற்றி தனது நெஞ்சில் இதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தவறுதலாக நிகழ்ந்த ஒரு சூட்டில் ஏற்பட்ட காயத்தை காட்டி போராளிகளுக்குகூட தவறுதலாக படும் என்று விளக்கி விட்டு அருகில் இருந்த மக்களை அழைத்து அவர் தவறுதலாக சூடு கொழுவி விட்டதை சொல்லி அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி பணித்த பின்னரே நாம் தங்கி இருந்த இடம் வந்ததாக சொன்னான் சீலன்.

அந்த நேரத்தில் தொலைத்தொடர்பு கருவிகள் எதுவுமே இயக்கத்திடம் இருந்திருக்கவில்லை.. பருத்தித்துறையில் தவறுதலாக ஒரு பொதுமகனும் காயமடைந்த விடயத்தை தலைவருக்கு அறிவிப்பதற்காக பொட்டுவை பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி விட்டே சீலனும் கிட்டுவும் வல்வெட்டித்துறைக்கு வந்திருந்தனர்.

அங்கு வந்த பின்பும் சீலனதும் கிட்டுவினதும் பதட்டமும் கவலையும் குறைந்தபாடாக இருக்கவில்லை..
தவறுதலாக காயமடைந்த அந்த தமிழ்மகனது தற்போதைய நிலை எப்படி இருக்கிறதோ என்று கதைத்தபடியே இருந்தனர்.

இல்லையென்றால் தாங்கள் இருவருமே மந்திகை சென்று அவரது நிலை பற்றி அறிய போவதாக சொல்லி கொண்டே நின்றனர்.நேரம் ஒரு 2மணியாகிறது (மதியம்).
இறுதியில் பண்டிதர் முடிவு ஒன்றை எடுக்கிறார்.வேறு யாரையாவது அனுப்பி அந்த தமிழ்மகனது உடல்நிலையை பற்றி உடனடியாக அறிவது என்று..

எம்முடன் அப்போது தொடர்பில் ஒரு மருத்துவ மாணவன் இருந்தார் அவர் கொழும்பு மருத்துவ பல்கலைகழகத்தில் அப்போது கற்று கொண்டிருந்தார்.
எமது நல்ல காலத்துக்கு அவர் அப்போது விடுமுறையில் ஊரில்தான் நின்றார்.

உடனடியாக சீலனும் நாங்களும் அவர் வீட்டுக்கு சென்று நிலைமை சொல்லி எப்படியாவது உடனடியாக மந்திகை மருத்துமனைக்கு சென்று தவறுதலான சூட்டு காயமடைந்த அந்த பொதுமகனை பார்த்து அவரின் உடல்நிலை பற்றி முழுதான ஒரு மருத்துஅறிக்கை தருமாறு கேட்டோம்.

அவரும் உடனடியாக ஒப்புக்கொண்டு தனது ஸ்கூட்டரில் மந்திகை புறப்பட ஆயத்தமான போதுதான் அது நடந்தது. எவளவு உறுதியானவன் எங்களின் சீலன்.அவன் மிகவும் உடைந்து அழுதுகொண்டே அவரின் கைகளை பற்றியபடி சொன்னான். ‘ அண்ணே நாங்கள் வேணுமென்று அப்படி சுடவில்லை. தவறுதாலாக நடந்துவிட்டது.ஆனால் பாவம் அந்த மனுசன். அவருக்கு எத்தனை பிள்ளைகளோ அல்லது எத்தனை சகோதரிமார்களுக்காக அவர் உழைக்க வேண்டியவரோ.. அவருக்கு ஏதும் நடக்க கூடாது..ஒருக்கா பாருங்கோ’ என்றான்.

மிகவும் உறுதியான குரலில் அவருக்கு சொன்னான் ‘ அண்ணே அவருக்கு தனியார் மருத்துமனையில் கொண்டு போய் சிகிச்சை செய்வதாக இருந்தால் அதன் முழு செலவையும் இயக்கமே ஏற்றுக்கொள்ளும் ‘ என்று சொன்னான்.அடுத்த நேரத்து உணவுக்கே அப்போது இயக்கம் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்த நேரம்.தினமும் மதிய உணவுக்காக படும்பாடு எல்லாம் தெரிந்திருந்தும் சீலன் ஒரு நம்பிக்கையில் கூறிய இந்த வார்த்தைகளில் இருந்த சத்தியம் அற்புதமானது..

நிலைமை அறிந்து வரச் சென்றவர் இரண்டு மணித்தியாலத்தின் பின்னர் முழுவிபரத்துடனும் வந்தார்.தவறுதலாக காயமடைந்தவர் ஆபத்தான நிலையில் இல்லை.ஆனாலும் அவர் காயத்தில் இருந்து குணமாக எப்படியும் ஆறுமாதங்கள் செல்லும் என்றார்.பயப்பட ஒன்றும் இல்லை என்று அறிந்தபின்னரே சீலனும் கிட்டுவும் ஆறுதலடைந்தார்கள்.

ஒரு தவறதலான சூடு.அதில் எம்மால் காயமடைந்த ஒரு பொதுமகனின் உயிiரை காப்பாற்றுவதிலும் அவரின் எதிர்கால வாழ்வு பற்றியும் சிந்தித்த இந்த குணம் என்பது வெறுமனே சீலனதும் கிட்டுவினதும் தனித்த குணங்கள் அல்ல.. தலைவனின் குணங்கள்!!,அவனது வழிநடத்தலில் தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் பொதுப்பண்பே அதுதான்.
வெறுமனே ஆயுதத்தை ஏந்திய ஒரு அமைப்பு அல்ல தமிழீழவிடுதலைப்புலிகள்அமைப்பு.
மகத்தான ஒரு அறம் ஒன்றையே அவர்கள் தமது விடுதலைப் போராட்டத்தினுடாக நிகழ்த்தினார்கள்.
குருதியும் உயிரும் சிதறும் போர்க்களத்தினுள்கூட அவர்கள் மானுடத்தின் மீதான தமது பெரு விருப்பை வெளிப்படுத்தியபடியே நகர்ந்தார்கள்.
அந்த அறம் ஒருபோதும் தோற்காது… ஒரு போதுமே. தோற்காது

– ச.ச.முத்து –

0 Kommentare:

Kommentar veröffentlichen