பொங்கு தமிழ் 2017 - ' கிழக்கு எழுக தமிழ் ' !!

பொங்கு தமிழ் 2017 - ' கிழக்கு எழுக தமிழ் ' !!

பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்பில் மிகவும் எழுச்சியாக நடைபெற்ற எழுகதமிழ் பேரணி..


வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணி 10 . 02 . 2017 அன்று காலை கல்லடி மணிக்கூட்டுக் கோபுரம் முன்னால் வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பமானது.

யாழ்.மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான தருமலிங்கம் சித்தார்தன் மட்டக்களப்பு மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், முன்னாள் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் எஸ்.வசந்தராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த இடத்திலிருந்து ஆரம்பமான எழுக தமிழ் பேரணி, நாவற்குடா மைதானத்தில் எழுக தமிழ் நிகழ்வு இடம்பெறும் மைதானம் வரை சென்றது. வடக்கு கிழக்கு இணைப்பு இராணுவத்தினர் வெளியேற்றம் காணாமல் போனோரை கண்டுபிடித்தல் உட்பட பல கோசங்கள் அடங்கிய பதாதைகளையும் ஊர்வலத்தில் ஏந்திச் சென்றனர்.

எழுக தமிழ் நிகழ்வின் போது பிரகடனம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

அங்கீகரி அங்கீகரி எங்கள் தாயகத்தை அங்கீகரி, சுயநிர்ணயத்தை அங்கீகரி, அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய், இணைந்த வடக்கு கிழக்கே எமது தாயகம், போர்க்குற்றம் மற்றும் இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணைகள் வேண்டும், பிறந்த மண்ணே எமது வாழ்விடம், ஒற்றையாட்சி தீர்வல்ல சமஷ்டி அடிப்படையிலான ஒரு கூட்டாட்சியே எமக்கு தேவை, கிழக்கிலும் வடக்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இனவாத மேலதிக்கத்தை நிறுத்துவதை வலியுறுத்துகின்றோம் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு எழுக தமிழ் பேரணியில் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் வடக்கும் கிழக்கும் பிரிபட முடியாத தேசம் என்பதை “எழுக தமிழ் “எழுச்சிப் பேரணி தெளிவுபடுத்தியது.!

கிழக்கு மாகாணத்தில் வரலாறு காணாத எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நடைபெற்றுள்ளது. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஒன்றுகூடி தமிழினத்தின் உரிமைக்காகத் குரல் கொடுத்துள்ளனர்.

அவர்களின் உரிமைக்குரல் ஈழத்தமிழர் விடயத்தில் உறங்குகின்ற சர்வதேச சமூகத்தை தட்டியெழுப்பி இன்னும் துயிலுதியோ வன்நெஞ்சப் பேதையர் போல் என்று கேட்பது போல அமைந்துள்ளது.

தவிர இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும் என்பதையும் சப்புச்சவரான தீர்வு எதனையும் தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதையும் இடித்துரைப்பது போல கிழக்கின் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி அமைந்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.

கிழக்கு மாகாணம் தமிழர்களிடமிருந்து பறிபோகிறது. இதைத் தடுத்து நிறுத்த யாருமிலையோ என்று தமிழ்ப் பற்றாளர்களின் நெஞ்சம் கலங்கிய வேளை தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடந்த கிழக்கின் எழுக தமிழ் எழுச்சி, தமிழ் இனத்தின் நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கும் விடுதலைப் போராட்டம் தோல்வியில் முடிந்தமையால் தமிழர்களை இனி எதுவும் செய்யலாம் என்று நினைத்தவர்களுக்கும் நல்லதோர் பதிலடியாக அமையும் என்பது மறுக்க முடியாத உண்மை.

கிழக்கு மாகாணத்தில் எழுக தமிழ் எழுச்சிப்பேரணி இடம்பெறுவதைத் தடுப்பதில் தேர்தல் அரசியல் இலாபத்தில் வீழ்ந்துளலும் நம்மவர்கள் சிலர் கடும் பிரயத்தனம் செய்தனர். இத்தகையவர்கள் பேரணிக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டனர்.

இதோ இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கப் போகிறது. அதற்கிடையில் இத்தகைய பேரணிகள் தேவைதானா என்று கேள்வி எழுப்பினர்.

ஆக, வடக்கில் நடந்த எழுக தமிழ் எழுச்சிப் பேரணியைத் தடுக்க முற்பட்டவர்கள் கிழக்கிலும் அதே கயமைத்தனத்தைச் செய்தனர்.

இருந்தும் வீறுகொண்ட ஓர் இனத்தை அடக்கிவிடமுடியாது என்பது போல இது காலும் பொறுமை காத்த தமிழ் உறவுகள் அந்தப் பொறுமையை உடைத்து எழுக தமிழ் என்ற கோசத்தோடு எழுச்சிப் பேரணியாக எழுந்தனர்.

கிழக்கின் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத ஒரு பேரணியாக எழுக தமிழ் எழுச்சிப்பேரணி நடைபெற்றமை தமிழ் மக்கள் பேரவையின் முயற்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்பதுடன் தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்கள் சார்ந்து எடுக்கும் நடவடிக்கைகளுக்கான அங்கீகாரமென்றும் கருத முடியும்.

தவிர வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம். வடக்கும் கிழக்கும் பிரிபட முடியாத தேசம் என்பதை எழுக தமிழ் எழுச்சிப் பேரணி இந்த உலகிற்கும் இலங்கை அரசிற்கும் மீண்டும் ஒரு தடவை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

மேலும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை, காணாமற்போன வர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறவில்லை, சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கப்படவில்லை என்ற பல பிரச்சினைகள் இன்னமும் தொடர்கின்றன.

இது தொடர்பிலும் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்பதை பகிரங்கமாகக் கேட்பதாகவும் கிழக்கின் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் அலை கடலெனத் திரண்ட தமிழ்மக்களின் உணர்வுப் பிரவாகம் அமைந்துள்ளது.

இதேவேளை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி மேடையில் ஏறியபோது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகள் கரகோசம் செய்து ஆரவாரத்தோடு அவரை வரவேற்ற நிகழ்வு வடக்கு மாகாணத்துடன் கிழக்கு மாகாணம் இணைய வேண் டும் என்பதற்கான அங்கீகாரம் என்றால் அது மிகையில்லை.

ஆகவே வடக்கிலும் கிழக்கிலும் நடைபெற்ற எழுக தமிழ் எழுச்சிப்பேரணி தமிழ்மக்களின் உணர்வுபூர்வ மான- அஹிம்சை வழியிலான போராட்டம் என்பதை உணர்ந்து அதனை ஏற்று வடக்கையும் கிழக்கையும் இணைத்து உரிய தீர்வை வழங்குவது நல்லாட்சியின் தார்மீகக் கடமையாகும்.

தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் மக்கள் எழுச்சி இன்று எழுக தமிழ் பேரணியாக மாற்றம் பெற்றுள்ளது !

எழுக தமிழ்...

காலம் கடந்தாலும் காலன் தடுத்தாலும்
கோலத் தமிழ் எழுகவே!

நீலம் தொலைந்தாலும் நீளம் மறைந்தாலும்
வானத் தமிழ் எழுகவே!

குமரித் தமிழ் கொண்டு இமயம் தனை வென்ற
சங்கத் தமிழ் எழுகவே!

பாண்டியன் ஒரு புறமும்சேரன் கோ மறு புறமும்
சோழன் தமிழ் எழுகவே!

வள்ளுவனை வானத்தில் வைத்தே வணங்குதற்கு
சொல்லும் தமிழ் எழுகவே!

எங்கும் மலர்ந்த தமிழ் இங்கும் மலரட்டுமே
பொங்கித் தமிழ் எழுகவே!

முந்தை நினைப்போடு சிந்தை நிறைப்பதற்கு
சந்தத் தமிழ் எழுகவே!

எங்கே முரண்பாடு என்றேதும் தோன்றாமல்
நன்றே தமிழ் எழுகவே!

நேரம் கைகூடியது பாரம் தனைக் குறைக்க
ஈரத் தமிழ் எழுகவே!

வையம் இறக்காது வீரம் மறக்காது
பையத் தமிழ் எழுகவே!

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் !!

https://youtu.be/tOgqenx9Xig

https://youtu.be/9JqVEccaMJU

https://youtu.be/A3z5odFD4BU

https://youtu.be/uDQm0f4FNsc

https://youtu.be/UwLd3L1S6XA

https://youtu.be/U3tL4yK9e9U

https://youtu.be/FAXO5K0GqbM

https://youtu.be/eN8o8WrVFjo


0 Kommentare:

Kommentar veröffentlichen